குழந்தை – செ. செபமாலை
குழந்தை - செ. செபமாலை
நாட்டுக்கூத்துக் காவலன் ‘கலாபூஷணம்”
(மன்னார்) ‘குழந்தை” செ. செபமாலை
நாடகத்தின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள். பம்மல் சம்மந்த முதலியார். கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோர் வரிசையில் வைக்கப்படவேண்டியவர் குழந்தை செபமாலை அவர்கள்.
‘ஜயா சிறுவன் என்மேல் மனம் இரங்காதா?” என்ற ஒரு பழைய பாடலைப் பாடியபடி ஒரு ஜந்துவயதுச் சிறுவன் மேடையில் தோன்றுகின்றான் அப்பொழுது அந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்குத் தெரியவில்லை பிற்காலத்தில் இவன் ஒரு நாடகச் சிற்பியாக மிளிரப் போகின்றான் என்கின்ற உண்மையின் ரகசியத்தை
அன்று ஜந்து வயதில் ஏழைச்சிறுவனாக மேடையேறிய அந்தச் சிறுவன் பிற்காலத்தில் சிறந்த கலைஞனாகவும் தன்னை உருவாக்கிக்கொள்கின்றான். அந்தக் கலைஞன்தான் குழந்தை செ.செபமாலை.
நாற்பது வருடங்களுக்கு மேலான தனது கலைப்பயண வாழ்வில் கவிஞர் நடிகர் நாடகாசிரியர் நெறியாளர் நாட்டுக்கூத்து அண்ணாவியார். இப்படியாக பலதுறைகளிலும் தனது பெயரை ஊன்றிப் பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு முது கலைஞர் இந்த குழந்தை செபமாலை அவர்கள்.
பல கலைஞர்களுக்கு அவர்களின் சொந்தப் பெயர்களைவிட பட்டப் பெயர்களே நிலைத்து விடுகின்றன! அதுபோலவே இவரோடு நிலைத்துக்கொண்ட பெயர்தான் ‘குழந்தை”.
பணிவான பேச்சுடன். பெரியவர்களுக்கு இவர் கொடுக்கும் மரியாதை. மட்டுமல்ல குழந்தைகள்போல அனைவரிடத்திலும் அன்போடு பழகும் குணமும் ஒருங்கே கொண்டதனால் எல்லோரும் இவரை குழந்தை என்றே அழைக்கத் தொடங்கினார்கள். அதுவே இவரது பெயராகிவிட்டது இன்று செபமாலை என்பதைவிட குழந்தை என்றால்த்தான் எவரும் எழிதாகத் தெரிந்து கொள்வார்கள்.
திரு.செபமாலை அவர்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக கலைத்துறைக்கு செய்துவரும் தொண்டு அளப்பரியது! நாடகத்தின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள். பம்மல் சம்மந்த முதலியார். கலையரசு சொர்ணலிங்கம். ஆகியோர் வரிசையில் வைக்கப்படவேண்டியவர்.
‘முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தை நாற்பது வருடங்களுக்கு மேலாக கட்டிக் காத்துவரும் குழந்தை அவர்கள் நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் மட்டுமல்ல ‘அறப்போர் அறைகூவல்” ‘இன்பத்தமிழன்” ‘இதய ஓலம்” நாம் இலக்கம் 1.” நாம் இலக்கம் 2″ ‘மாதேட்டம்” கவிதைத்தொகுதி” ‘மரபுவழி நாடகங்கள்” ‘பரிசுபெற்ற நாடகங்கள்’ இப்படியாக இன்னும் பல நூல்களையும் எழுதியிருக்கின்றார்.
இவர் நெறியாழ்கை செய்து அரங்கேற்றிய நாடகங்களில் வீரனை வென்ற தீரன். யார் குழந்தை. விடுதலைப் பயணம் ஆகிய நாடகங்கள் விவலியம் என்னும் கருத்துக்களை உள்ளடக்கியதாகும். பழமையான மரபுக் கூத்துக்களின் வழியில் இவை அமைந்திருந்தாலும் காலத்தின் தேவை அறிந்து கூத்து மரபில் வராத வசனங்களையும் அத்துடன் சேர்த்து இளைய சந்ததியினரும் கூத்துக்களை பார்க்கும் வண்ணம் புதுமையான முறையில் உருவாக்கியிருந்தார்.
1966ல் இவரால் அரங்கேற்றப்பட்ட வீரத்தாய் என்னும் நாடகம் பின்னர் கொழும்பிலும் மேடையேற்றப்பட்டபோது முன்னாள் துணைவேந்தர் அமரர் சு.நித்தியானந்தன் ஆவர்களின் அனுசரணையுடன் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 1968ல் அரங்கேற்றிய கல் சுமந்த காவலர்கள் என்ற நாடகம் மன்னார் பிரதேச கலைவிழாவில் முதல்ப் பரிசும் 1972ல் முருங்கனில் நடைபெற்ற கலைவிழாவில் இணைந்த உள்ளம். இப்படி பரிசுபெற்ற நாடகங்களின் வரிசையே அதிகம் என்பதும் பெருமைக்குரிய விடயம்.
இலங்கை அரசின் கலாச்சாரப் பேரவையால் ‘கலாபூசணம் விருது பெற்ற குழந்தை செபமாலை அவர்கள் கடந்த 10-06-2005 அன்று கிழக்கிலங்கைப் பல்கலைகழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக நாடக தின விழாவில் ‘தலைக்கோல” என்னும் விருது வழங்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.