கலைமாமணி – பெஞ்சமின் . இமானுவல்

முழுப்பெயர் கலைமாமணி - பெஞ்சமின் . இமானுவல்
கலைமாமணி - பெஞ்சமின் . இமானுவல்

இவர் யேசுநாதர் பிறந்த தினமான மார்கழி இருபத்தைந்தாம் திகதி பிறந்ததனால் பெற்றோர்கள் இவருக்கு இமானுவல் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்களாம். வளர்ந்து இளைஞனாக வந்த பின்னர் அதே யேசுநாதர் பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து மேடையில் ஆண்டவராக மாறியதனால் இவரைத் தெரிந்த மக்கள் இன்றளவும் இவரை ஆண்டவர் என்றே அழைக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் அருட்திரு மரியசேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட திருமறைக் கலா மன்றம் உலகின் பல பாகங்களிலும் தனது கிளைகளை விஸ்த்தரித்தபோது மன்றத்தின் பிரான்ஸ் கிளைத் தலைவராக இருந்து பல கலை நிகழ்வுகளை நடாத்தி மன்றத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கின்றார்.

இமானுவல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்திலும்சரி புலம் பெயர்ந்து பிரான்ஸ் வந்த பின்னரும்சரி கலை நிகழ்வு ஒன்றினை நடாத்த எண்ணுபவர்களின் நினைவிற்கு முதலில் நினைவிற்கு வருபவர் இமானுவல் அவர்களாகத்தான் இருக்கும்.

1971ல் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கில் திருமறைக் கலா மன்றத்தால் பாஸ் என்று சொல்லப்படும் யேசுவின் திருப்பாடல்களின் காட்சி நடத்தப்பட்டபோது சேகுவாரா இயக்கத்தினரால் யாழ் கோட்டை உடைப்பு முயற்சி இடம்பெற்றதால் இவர்களின் நாடகம் முழுமையடையாம‌ல் நிறுத்தப்பட்டாலும் அன்றைய சம்பவத்தை யாழ்ப்பாணத்து மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்! அன்றைய தினம் அந்த நாடகத்தில் யேசுநாதராக நடித்த இமானுவல் அவர்களும் அந்நாளை தன்னால் மறக்கமுடியாத ஒரு கலை இரவு என்று அடிக்கடி கூறுவார்.

நான் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேடையேற்றிய சாவுக்குச் சவால்” என்ற நாடகத்தின் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கியவர் இமானுவல் அவர்கள்தான். பிரான்சிலும் நான் எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றார். நான் எழுதிய சில நாடகங்களில் நடித்திருக்கின்றார். இவருடைய கலை வாழ்வைப்பற்றி ‘கதாநாயகன்” என்னும் தலைப்பில் நான் ஒரு புத்தகமே எழுதியிருக்கின்றேன். அவ்வளவு சிறப்பிற்குரியவர் இமானுவல் அவர்கள்.

ஒப்பனை ஆடையலங்காரம் செய்வதிலும் நாட்டுக்கூத்துப் பாடல்கள் பாடுவதிலும் நடிப்ப‌திலும், சூழ்நிலைக்கேற்ப மேடையலங்கார‌ம் அமைப்பதிலும் வல்லவரான இமானுவல் அவர்களிடம் பொறுமையும் திறமையும் இருப்பதனால் மக்கள் மதிக்கும் சிறந்த கலைஞனாக இருக்கின்றார்.

நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகளைக் கண்ட இந்தக் கலைஞன் பிரான்சில் தயாரிக்கப்பட்ட அனேகமான சின்னத்திரைப்டங்களில் நடித்திருக்கின்றார்.

மேடையிலும், மேடைக்குப் பின்னாலிருந்தும் கலைப்பணி ஆற்றிவரும் இவரின்கலைப்பணி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. கலைத்துறையில் இவர் ஒரு கதாநாயகன்தான்