அமரர் . கிறகரி தங்கராசா

முழுப்பெயர் அமரர் . கிறகரி தங்கராசா
மாவட்டம், நாடு யாழ்ப்பானம் சுண்டுக்குழி
வாழ்ந்த நாடு பிரான்ஸ்
பிறந்த திகதி 02.08.1943
இறந்த திகதி 06.01.2000
அமரர் . கிறகரி தங்கராசா

நடிப்பிசைக் காவலர்
அமரர்.கிறெகரி-தங்கராசா
கூத்திசைப் பாடகர். நடிகர். பின்னணிப் பாடகர்.நாடக நெறியாளர்.

மேடைகளில் சமூக சரித்திர நாடகங்கள். மற்றும் நாட்டுக்கூத்து ஆட்டக்கூத்து. தென்மோடி வடமோடிக் கூத்துக்கள் நடித்தல் மற்றும் நாடகங்கள் நெறிப்படுத்துதல். பாடுதல் இப்படியாக பலரிடம் இருக்கக்கூடிய திறமைகள் இந்தக் கலைஞன் ஒருவரிடமே இருந்தது வியப்பிற்குரியதே.

கலை ஆர்வம் காரணமாக சிறு வயதிலேயே நடித்தல் பாடுதல் போன்ற துறைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் தாய் மண்ணில் இருந்த காலத்தில் மேடையேற்றிய பல நாடகங்களில் ‘ஆனந்தக் கண்ணீர் “என்னும் நாடகம் மிகவும் பிரசித்தமானது. இவர் நடித்து நெறியாழ்கை செய்த பல நாடகங்கள் நாடகப் போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி பரிசுகளும் பெற்றிருக்கின்றன.

பல இசைக் குழுக்களில் பின்னணிப் பாடகராகவும் இருந்ததோடு நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களுடன் இணைந்து ஒரு நாடகத்தில் நடித்திருந்த கிறெகரி அவர்கள் நடித்த சங்கிலியன் நாடகம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராட்சி மாநாட்டின் கலை நிகழ்வுகளில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமறைக் கலா மன்றத்தின் பிரசித்திபெற்ற நாடகமான ‘பாஸ்” என்று சொல்லப்படும் இயேசுநாதரின் வரலாற்றைச் சொல்லும் நாடகத்தில் பல மேடைகளில் பிலாத்துவாக நடித்திருக்கின்றார். அந்த நாடகம் வீடியோவில் பதிவானபோதும் இவரே பிலாத்துவாகவும் நடித்திருந்தார். (இந்த நாடகம் யாழ் விளையாட்டரங்கத்தில் மேடை ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தபோதுதான் சேக்குவாரா போர் ஆரம்பமாகி யாழ் பொலீஸ் நிலையத்தை தாக்கி அவர்கள் தங்கள் இயக்கத் தலைவர் றோகண விஜயவீராவை மீட்க முயன்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்)

புலம் பெய‌ர்ந்து பாரிஸ் வந்த பின்னர் ஜரோப்பாவின் பல நாடுகளிலும் இவரின் கலைக்கோவில் நாடக மன்றத்தின் மூலமாக இசைக் கச்சேரிகளையும் நாடகங்களையும் நடாத்தியிருப்பதுடன் பாரிசில் நாட்டுக்கூத்து நாடகத்தை முதலில் அரங்கேற்றிய பெருமையும் இவருக்கே உண்டு

தனது கலைக்கோவில் நாடகமன்றத்தின் மூலமாக ச‌ங்கமம்” என்னும் வீடியோப் பத்திரிகை ஒன்றினை நடாத்தி பல கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள கிறெகரி அவர்கள் தனது கலை வாழ்வின் இருபத்தைந்தாவது வெள்ளிவிழா நிகழ்வில் இருபத்தைந்து கலைஞர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருப்பதுடன் அவ்வப்போது திறமையான கலைஞர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் வழங்கிக் கௌரவிப்பது இவரிடம் உள்ள சிறப்பு அம்சமாகும்.

இந்தக் கலைஞனின் கலைத்துறை வெள்ளிவிழாவில் இவரின் கலை வாழ்க்கையை வண்ணை தெய்வம் அவர்கள் எழுதி ரஜனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘கலைத்துறையில் கிறெகரி-தங்கராசா” என்னும் நூல் இவரின் மரணத்தின் பின் நடந்த முப்பத்தியோராம் நாள் நிகழ்வில் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.