
| ‘நாடக நேசர்” எம். அரியநாயகம்
நாடகநேசர் எம்.அரியநாயகம் (மனுவேல்பிள்ளை அரியநாயகம்)
வாய்மொழிவரலாறு
“நாடகநேசர்” என இன்று பலராலும் அறியப்படுகின்றவரான இவர் 1945 புரட்டாதி மாதம் 20 ம் திகதி றெஜீனா சுப்பர் ( தாயார் – மானிப்பாய்), செல்லப்பா மனுவேல்பிள்ளை (தந்தையார் – யாழ்ப்பாணம்) ஆகியோருக்கு மூன்றாவது மகனாக மானிப்பாயில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை யாழ்.புனிதர்.ஜேம்ஸ் ( St.James ) பாடசாலையிலும், அதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியை புனித.சன்பத்திரிசியார் ( ( St.Patrick’s College) கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் பெற முடியாத கலை இலக்கியச் சுவையை வாசிப்பின் மூலமாக தன்னுள்ளே வளர்த்துக் கொண்டவர்.
பின்னர் தாம் விரும்பிய “ஊடகவியல்” சார்ந்து கற்றுத்தேற தமிழ்நாடு ( ndia ) செல்ல ஆயத்தமாகும் நிலையில் பெற்றோரின் அச்சம் காரணமாய் அது தடைபட்டுப் போயிற்று.
இவரது ஊடகத் தேடலுக்கு தீனியாகக் கிடைத்ததே “எழில்” சஞ்சிகை. கட்டுப்பெத்தை பல்கலை மாணவர்களால் நடாத்தப்பட்டுவந்து நின்றுபோன இதழைத் தொடர்ந்து நடத்துமாறு இவருடைய சக கல்லூரித் தோழமையான C.A.அருள்நாயகம் அவர்களின் விருப்பத்தை ஏற்று ( 1965 – 1970 ) 5 ஆண்டுகள் “எழில்” கலை, இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இதன் காரணமாக அப்போது பலராலும் நற்போக்கு, முற்போக்கு படைப்பாளிகளாக பலராலும் அறியப்பட்ட சொக்கன், செம்பியன் செல்வன் , யாழ்வாணன், செங்கையாழியன், நெல்லை க. பேரன் தெளிவத்தை யோசப், சில்லையூர் செல்வராஜன், சாந்தன், கோப்பாய் சிவம், கே.டானியல், பெனடிக் பாலன் மற்றும் கவிஞர்களான கந்தவனம், காரை சுந்தரம்பிள்ளை, அரியாலையூர் ஐயாத்துரை போன்ற அநேகருடனுமான அறிமுகமும், கலந்துபேசி உரையாடும் நல்வாய்ப்பும் கிடைக்கப் பெற்றார்.
“இதழியல்” சார்ந்த இவரது தேடலின் காரணமாய் “ஈழநாடு” நாளிதழிலும் சில மாதங்கள் பணிபுரிந்தார். இவர் எழுதிய சிறுகதைகள் “எழில் , பாதுகாவலன் , ஈழநாடு” போன்றவற்றிலும் மற்றும் அக்காலத்தே வெளிவந்த சிற்றிதழ்களிலும் வெளிவந்தாலும் நாடகமே இவரை மிகவும் ஈர்த்த இலக்கியமாயிற்று.
அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக அநீதிக்கு ஆளாகிப்போன குரலற்றவர்களின் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வலிமையானது. நாடகமே என்பதை தான் நடித்த நாடகங்களினூடாக கண்டுணர்ந்தமையே இவர் நாடகக் கலையை நேசிக்கக் காரணமாயிற்று. இவரால் தோற்றுவிக்கப்பட்ட “யாழ்.நவரச நாடகாலயம்” இவரது எழுத்து, இயக்கத்தில் தனது முதலாவது நாடகமாக “அன்பிருக்க்கும்வரை….” என்னும் நாடகத்தை 1965ல் கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் தலைமையில் ஆற்றுகைப்படுத்தியது.
இவரது முதல் நாடகமே ஒலி, ஒளி காட்ச்சிப் படுத்தல் போன்றவற்றிலும் குறிப்பாக இயல்பான உரையாடலிலும் அமைந்திருந்தது பார்வையாளர்களின் கவனத்தையும், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் அன்பையும், பாராட்டையும் பெறவைத்தது.
யாழ்.நவரச நாடகாலயத்தின் ஊடாக 15 க்கு மேற்பட்ட நாடகங்கள் வரை எழுதி இயக்கிய இவர் கலையரசு அவர்களின் கற்பித்தலில் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 30 க்கும் மேற்பட்ட நாடக நடிகர்களைக் கொண்டு இவர் இயக்கிய சேக்ஸ்பியரின் “ஜூலியஸ்சீசர்”, “சிலுவை மரணம்” ஆகிய நாடகங்கள் இவரை புதிய முயற்சி நாடக இயக்குநராக பலராலும் பேசவைத்ததோடு, கலாநிதி மரிய சேவியர் அடிகளார், நாடகர் சாணா (சண்முகநாதன்), சாணக்கியன், சு.பேரம்பலம் (போக்குவரத்து உதவி ஆணையாளர்) ஆகியோரான நாடக ஆளுமைகளின் அன்பையும், அவர்களிடமிருந்து நாடக நெறிமுறைகளை மேலும் இவர் கற்றுத்தேறக் காரணமாயிற்று.
நாடகம் மட்டுமன்றி மன்ற உறுப்பினர்களின் உதவியோடும், ஆதரவாளர்களின் பங்களிப்பினோடும்
இவரால் நடாத்தப்பட்ட, ஒளிவிழா, இசைவிழா, நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் விழா, நாட்டுக்கூத்து அண்ணாவியார்களுக்கான பாராட்டுவிழா போன்ற விழாக்கள் இன்றுவரை பேசப்படும் நிகழ்வுகளாக நிலைபெற்றுள்ளன.
கல்லூரிக் காலங்களிலும், பின்னரும் கலை இலக்கியத் துறைகளோடு மட்டும் நில்லாது சமூக நலன் சார்ந்த பொதுப்பணிகளிலும் தமிழின நலன், விடுதலை சார்ந்த பணிகளிலும் தனது பங்களிப்பினைச் செலுத்தியவராக விளங்குகின்றார்.
“வடக்கும் கிழக்கும் வளம் பெற உழைப்போம்” என்ற இலக்கை நோக்காகக் கொண்டு பல்கலை மாணவர்கள் சிலரால் தோற்றுவிக்கப்பட்ட “காவலன் சஞ்சிகை” வடக்கு கிழக்கு மாணவகளின் பொருளாதார அபிவிருத்தி ஏடாக வெளிவந்தது. இதன் வினியோகக் குழுவில் இணைந்து செயற்பட்டார். இருப்பினும் “காவலன்” சஞ்சிகையின் உள்நோக்கை அறிந்த இலங்கை அரசின் அச்சுறுத்தல் காரணமாய் ஓரிரு மாதங்களில் வெளிவராமல் நின்று போயிற்று.
1977 பாராளுமன்றத்தேர்தலிலும், 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலிலும் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேலுப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
1978ல் விவசாய சேவைத் திணைக்களத்தில் விவசாய சேவை அலுவலராக,
அரச ஊழியராக பணியாற்றிய வேளையில் காவல்துறையின் அச்சுறுத்தல் காரணமாக 1981ல் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து (France) பிரான்சு நாட்டில் தஞ்சம்புக வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்.
பிரான்சு நாட்டில் அடைக்கலம் பெற்றவர் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான முயற்சிகளோடு போராட வேண்டியிருந்தாலும். தாயகத்தில் விட்டுவந்த பணிகள் இவரை விட்டுவிடுவதாயில்லை. புதிய நாடு. புதிய மொழி, புதிய சூழமைவு இத்தகைய பல்வேறு நெருக்கடிகளிலும், 1984ல் “ஜரோப்பிய தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்” என்ற அமைப்பை உருவாக்கி ஐரோப்பிய ரீதியிலான
ஈழத்து படைப்பாளிகளின் ஆக்கங்களைத் தொகுத்து 1986ல் “மண்ணத்தேடும் மனங்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பினையும், அதனைத் தொடர்ந்து “தேசம் தாண்டிய நதிகள்” ‘நம்பிக்கை நாற்றுக்கள்’ என முறையே மூன்று சிறுகதைத் தொகுப்புக்களையும் “தூரத்து விடி வெள்ளி” என்ற கவிதைத் தொருப்பினையும் வெளிக்கொணர்ந்தார்.
இவற்றினைத் தொடர்ந்து பல்வேறு மாத சஞ்சிகைகள், வார, மாத ஏடுகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளிவரத் தொடங்கியதன் பொருட்டு ஐ.த.எ. ஒன்றியத்தின் சேவையை நிறுத்திக்கொண்ட இவர், மீண்டும் நாடாக் கலையை வளர்க்கம் பொருட்டு 1989ல் “பிரான்ஸ் தமிழர் கலை கலாச்சார ஒன்றியம்” (Groupement inter cultural franco Tamo uc) என்ற அமைப்பினை கலாநிதி.க.தேவமகேந்திரனுடன் இணைந்து தோற்றவித்தார்.
தாயகத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வந்த கலைஞர்கள் இவ்வொன்றியத்தில் இணைந்து செற்பட்டமையினால் அதன் பணிகளாக நாடகங்கள், நாடக நூல் வெளியீடுகள், இளையோருக்கான அரங்கப் பயிற்சிப் பட்டறைகள், கூத்திசை அறுவெட்டு வெளியீடுகள்,
கலைநர்களுக்கான மதிப்பளிப்புக்கள் என இவ்வொன்றியம் இன்று வரை செயலாற்றி வருகின்றது.
உலகாளாவிய அரங்காளர்களை ஒருங்கிணைத்து உலக அளவில் இளையோர் மத்தியில் நாடாக்கலை மீதான விழிப்புணர்வையும் கற்றுக் கொள்ளுதல் மூலமாக புதிய நாடக வளர்ச்சியை, உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கமாகவும் “உடல்” எனும் அரங்கியல்
இதழை வெளிக்கொணர்ந்தார். இதன் மூலமாக உலகாளாவிய, தமிழ் நாடக அரங்காளர்களின் தோழமையும் அரங்கியல் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களின் ஆதரவும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றமையால் உடல் அரங்கியல் இதழின் ஊடாக 2016 இல் (Paris) பாரிஸ்மா நகரிலும் 2018 இல் (London) இலண்டன் மாநகரிலும் இரண்டு உலக நாடக விழாக்களை நடாத்தியுள்ளார்.
இவ்விரு நாடக விழாக்கள் ஒவ்வொன்றிலும் தமிழ்நாடு (இந்தியா), இலங்கை, கனடா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உற்பட 11 நாடுகள் 15 நாட்களுக்கு மேல் ஆற்றுகைப்படுத்தியமை தனிச்சிறப்பாகும்.
இரண்டாவது உலக நாடக விழாவில் “யாதும் ஊரே” எனும் விருது கலாநிதி.நீ.மரிய சேவியர் அடிகளார் அவர்களால் திருமறைக்கலாமன்றத்தின் சார்பாக இவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை (France) பிரான்ஸ் நாட்டிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் 25ற்கு மேற்பட்ட மேடை நாடகங்கள் இவரது எழுத்து இயக்கத்தில் ஆற்றுகைப்படுத்தப்பட்டதோடு 30க்கு மேற்பட்ட வானொலி நாடகங்களும் ஐரோப்பிய தமிழ் வானொலிகளில் ஒலிபரப்பாகியுள்ளன. இவர் எழுதிய நாடகங்கில் நான்கு நாடகங்களை உள்ளடக்கிய தொகுப்பாக “நாளைய அறுவடைகள்” என்னும் நூலும் வெளியாகியுள்ளது.
ஜரோப்பா, கனடா நாடுகளில் இருந்து விருதுகள் இவரைத் தேடி வந்தாலும் தமிழகத்தில் மறைந்த நாடகப் பேராளுமை முனைவர் பேராசிரியர் கே.எ.குணசேகரன் அவர்களால் நாடகநேசர் என அழைக்கப்பட்டமையையே தனக்கு கிடைத்த பெரும் விருதாக ஏற்றிருக்கும் இவர் 1981ல் புலம்பெயர்ந்து தமது மனைவி, ஐந்து பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் என மன நிறைவோடு வாழ்ந்து வரும் இவரின் 16வது வயதில் தொடங்கிய கலை இலக்கியச் செயற்பாடுகள் 79ஐ தாண்டியும் தொடர்கிறது.