குழந்தை ம- சண்முகலிங்கம்

முழுப்பெயர் -- மயில்வாகனம் - சண்முகலிங்கம்
பிறந்த திகதி -- 1931-11-15
மாவட்டம், நாடு -- யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் , இலங்கை
குழந்தை ம- சண்முகலிங்கம்

மயில்வாகனம் – சண்முகலிங்கம்

—————————————————-

(யாழ்ப்பாணம்)

1931-11-15 ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்த இவர் குழந்தை ம.சண்முகலிங்கம் என எல்லோராலும் அறியப்படுகிறார்.1950ம் ஆண்டு நாடக பயணத்தை ஆரம்பித்த ம.சண்முகலிங்கம் 1951ம் ஆண்டு திருநெல்வேலி இந்து வாலிப சங்க நாடகமொன்றில் கிழவன் பாத்திரம் ஏற்று நடித்தார். 1957ம் ஆண்டு அருமை நண்பன் என்னும் நாடகத்தை எழுதி தயாரித்ததோடு1958ம் ஆண்டு கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த நாடகத்தில் அருச்சுனன் பாத்திரம் ஏற்று நடித்தார். 1960ம் ஆண்டு திருக்குறள் தந்த திருவள்ளுவரின் வாழ்வைச் சித்தரிக்கும் வையத்துள் தெய்வம் என்னும் எழுத்துருவை எழுதியதோடு சந்தி, தாலியைக்கட்டு போன்ற நாடகங்களிலும் பங்குகொண்டார்.

ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய இவர் 1976ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடக டிப்ளோமாப் பயிற்சியில் பங்கு கொண்டதன் ஊடாக நாடகத்துறையில் புதிய பயணததை மேற்கொள்ளக்காரணமாக அமைந்ததுடன் நாடகக் கலைஞர் அ.தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரியினை உருவாக்கினார். இதன் முதல் படைப்பாக கூடிவிளையாடு பாப்பா சிறுவர் நாடகத்தினை எழுதி அரங்கேற்றியதோடு அ.தாசீசியஸ் உடன் இணைந்து நாடக அரங்கக் கல்லூரியின் ஊடாக நாடக ஆர்வலர்களுக்கு களப்பயிற்சியினை நடாத்தினார்.குறிப்பாக பல பாடசாலைகளிலும் இவர் நாடக பயிற்சியை வழங்கியுள்ளார்.

1980ம் ஆண்டு காலப் பகுதியில் உறவுகள், நாளைமறுதினம், மாதொருபாகன், புழுவாய் மரமாகி, தாயுமாய் நாயுமானார், திக்விஜயம் , நரகத்தில் இடர்ப்படோம், சத்தியசோதனை, தியாகத்திருமணம் , பஞ்சவர்ண நரியார் போன்ற பாடசாலை நாடங்களை எழுதி தயார்த்தார்.1985ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலாசார குழுவுக்காக மண்சுமந்த மேனியார் எழுதித் தயாரிக்கப்பட்டது. மண்சுமந்தமேனியர் என்னும் நாடகத்தினூடாக ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி விபரித்ததோடு, அன்னை இட்ட தீ (1991) நாடகத்தின் ஊடாக போராட்டத்தின் காரணமாக மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் தொடர்பாக பேசியிருந்தார். எந்தையும் தாயும் முதுமையில் பெரியோர்களை பேணுதல் தொடர்பாக பேசுகிறது. யார்க்கெடுத்துரைப்பேன் என்ற இவரின் நாடகம் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த அகதிகளின் அவலநிலையை பேசுகிறது.இந்திய அமைதிப் படையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை வேள்வித் தீ நாடகம் சித்தரிக்கிறது.ஆர்கொலோ சதுரர், அளப்பெருங்கருணை போன்ற நாட்டிய நாடகங்கள் என்பவற்றுடன் தாகூரின் துறவி, கிரேக்க இடிபஸ் மன்னன், நோவே ஒரு பாவை வீடு என்பனவற்றை மொழிபெயர்த்து மேடையேற்றினார்.

கலைப்பட்டதாரியான சண்முகலிங்கம் ஈழத்தின் சொர்ணலிங்கம், தமிழகத்து பம்மல் சம்பந்தமுதலியார் ஆகியோரை குருவாகக்கொண்டு தனது இயல்பான நடிப்பினாலும் அரங்க அமைப்பு முறைகளினாலும் நவீனமயப்பட்ட அரங்கொன்றை ஈழத்திற்கு தந்துள்ளார். அவரது உலக நாடக அரங்கியல் மாற்றங்களோடு தன்னை இணைத்துக்கொண்டு புடம் போட்டு ஈழத்தமிழரின் அரசியலை, வாழ்க்கை ஆகியவற்றை நாடகத்தின் பொருளாக்கி ஈழத்தின் தமிழ் நாடகப் போக்கயே மாற்றியமைத்தவர்.

நூறுக்கும் மேற்பட்ட சமூகவிடுதலை, அரசியல் விடுதலை, பண்பாட்டு விடுதலை சார்ந்த நாடகங்களை ம.சண்முகலிங்கம் எழுதியுள்ளார்.

இவற்றில் பல நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1970களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றினை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தமையானது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக காரணமாகியது.

1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் இராணுவ அடக்குமுறை, பெண்களுக்கெதிரான அடக்குமுறை, மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை, சாதிய அடக்குமுறை, சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினார். குறிப்பாக இவரின் மண் சுமந்த மேனியர் நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.

ஈழத்திலே நாடகத் தலைமுறையொன்றின் தாயென கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்களால் வர்ணிக்கப்படும் மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்களின் பெரும்பாலான நாடக எழுத்துருக்கள் சமூக, அரசியல், போர்க்கால உளவியல் நாடகங்களாக உள்ளதோடு மக்களின் சமகாலப்(1980-2009) பிரச்சினைகளை பேசுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது”.

ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வராலாற்றில் முதன் முதலில் உளவியல் நாடகங்களை எழுதிய பெருமை இவரையே சாரும்.இவரின் அனைத்து எழுத்துருக்களும் சிறப்பானவையாக விளங்குவதோடு அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், மண்சுமந்த மேனியர் என்பன ஈழத்துத்தமிழர்களின், எண்பதுகளின் வரலாற்றுக்கான முக்கியமான கலைப்பதிவாகும். மண்சுமந்த மேனியர்-(1985) முதல் எந்தையும் தாயும் வரை(1992) உள்ள நாடகங்கள் “யாழ்ப்பாணத்தின் போர்க்கால வரலாற்றுக்கான அரங்கியற் பதிகைகளாகும்”. பலர் எடுத்துப்பேசத் தயங்கிய பல விடயங்களைச்குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் ஒளிவு மறைவின்றி எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, மாதொருபாகம், வேள்வித்தீ, மண்சுமந்த மேனியர், நீ செய்த நாடகமே, நரகொடு சுவர்க்கம் போன்ற பல நாடகங்கள் மூலம் அலசினார் எனலாம்.

ம.சண்முகலிங்கம் அவர்கள் நாடகத்துறையினுள் நுழைந்த காலத்திலிருந்து(1950) இன்று வரைக்குமான அவரது பங்களிப்பை அறிவோமாகயிருந்தால் நடிகராக, நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப் போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்குகின்றார்.1976ம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.

இவரின் நாடகத்துறை அதீத ஆற்றல்

காரணமாக இவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வருகை தரு விரிவுரையாளராக நியமித்தது. 2001ம் ஆண்டு நாடகத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நூற்றி ஐம்பதிற்கு(150) மேற்பட்ட நாடக எழுத்துருக்களை எழுதியுள்ளார். அவற்றின் தொகுப்பு கீழே உள்ளது.

பா.நிரோஷன்

நாடகப்பள்ளி

இலங்கை

கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை

குழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை

 

ஈழத்துத் தமிழ் நவீன அரங்க வரலாற்றில் குழந்தை ம.சண்முகலிங்கம் (1931.11.15)அவர்கள் நாடகத்துறையினுள் நுழைந்த அன்றிலிருந்து(1950) இன்று வரைக்குமான அவரது பங்களிப்பை அறிவோமாகயிருந்தால். அதாவது நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.“குழந்தை ம.சண்முகலிங்கம்அவர்கள்;  நாடகத்துறைக்காற்றி வரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    குழந்தை ம.சண்முகலிங்கம்  அவர்கள் ஈழத்துத் தமிழ் நாடக உலகில் நூற்றி ஐம்பதிற்கு(150) மேற்பட்ட நாடக எழுத்துருக்களை (“அருமை நண்பன-1958”, “வையத்துள் தெய்வம்”-1961, ”நெடும் பயணம்”-1979, “உறவுகள் ”-1982, “மண்சுமந்த மேனியர்”-1985, “பாஞ்சாலி சபதம்” -1989 “எந்தையும்தாயும்”, “அன்னையிட்டதீ”-1991, “உள்ளக்கமலமடி” -1992 , “ஆரோடுநோகேன்”-1993, “நீ செய்த நாடகமே”-1994, “யார்க்கெடுத்துரைப்பேன்”, “மாதொரு பாகம் நாடகம்” “தாயுமாய் நாயுமானார்”, “புழுவாய் மரமாகி”, “எங்கள் தவப்பயன்”,  “நரகத்தில் இடர்படோம்”, “சத்திய சோதனை”, “நாளை மறுதினம்”, “திரிசங்கு சொர்க்கம்”, “தியாகத்திருமணம்”, “வேள்வித்தீ ”, “பள்ளியெழுந்திடுவீர்”, “மனத்தவம்”, “ஆர்கொலோசதுரர்”-2002. “நரகொடு சுவர்க்கம”,   “வாற்பேத்தை”, “புகலிடம் பிறிதோன்றுமில்லை” , “நேயத்தே நின்ற நிமலன்”) எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1950 தொடக்கம் இற்றை வரைக்குமான நாடக வளர்ச்சியில் சண்முகலிங்கத்தின் இடத்தினையும் பங்கையும் முக்கியத்துவத்தினையும் இக்கட்டுரை மிகமிக சுருக்கமாக விபரிக்கிறது.
ஈழத்து அரங்க வரலாற்றில் போர்க்கால உளவியல் சார்ந்த அறிவு வளர்ச்சியடையவில்லை என்றே கூற வேண்டும்.போர்க்கால உளவியல் நாடகங்கள் மக்கள் மத்தியில் அறியப்படாததாகவே உள்ளது.ஏனைய நாடக வகைகளை விட உளவியல் சார் நாடக எழுத்துருக்களே மக்களை ஆற்றுப்படுத்தும் வகையில் படைக்கப்படுகின்றன.அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடக எழுத்துருக்களை ஆற்றுப்படுத்தும் நாடகங்கள் எனவும் கூறலாம்.இவ்வாறு அழுத்திக் கூறுவதற்கு காரணம் என்னவெனில்“கா.சிவத்தம்பி(1932-1943.07.06) கூறியது போன்று சண்முகலிங்கத்தின் நாடக எழுத்துருத்தாக்கத்தின்பெறுமதி இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது.மேலும் சிலர் ஒத்துக்கொள்ளவும் இல்லை. குறிப்பாக சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள் பற்றிய அறிவு வெளித்தெரிய வேண்டும் என்பதை கருத்திற் கொண்டே இக்கட்டுரையானது தனது பயணத்தை துவங்குகின்றது”.
    ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வராலாற்றில் முதன் முதலில் உளவியல் நாடகங்களையும், சிறுவர் நாடகங்களையும் (கூடிவிளையாடு பாப்பா-1978, இடுக்கண் வருங்கால்-1998, கண்மணிக்குட்டியார்-2005, கண்டறியாத கதை-2005, நட்பு, ஆச்சி சுட்ட வடை, கூடிவாழ்வோர், குழந்தைகள் பாவனை செய்யும், வேட்டைக்காரன், அன்னத்தடாகம், குளத்து மீன்கள், சிலையின் சீற்றம், செல்லும் செல்லாத செட்டியார், ஒரு பூனையின் விலை என்ன?, ஒற்றுமையின் சின்னம், பண்பும் பயனும், முயலார் முயல்கிறார், பாலுக்கு பாலகன், காட்டு ராஜா சிங்கம், பஞ்சவர்ண நரியார்-2004, மந்திரத்தால் மழை, பந்தயக் குதிரையார், அயலவன் யார்?, அன்னையும் பிதாவும், தாய் சொல்லைத் தட்டாதே ) எழுதிய பெருமை இவரையே சாரும்.
   ஈழத்தின் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ்ச் சமூகமானது யுத்தத்தின் மத்தியில்(1977-2009) வாழ்ந்துவருவதையே கவிதைகளும், நாவல்களும், சிறுகதைகளும், பாடல்களும், நாடகங்களும் கூறுகின்றன. ஏனைய கலையிலக்கியங்களை விட சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் கலையாகவே நாடகக்கலையுள்ளது என்பதை யாவருமறிவர். தமிழ்ர்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் காரணமாக தமிழர்களின் மனிதஉரிமை மறுக்கப்பட்டதன் காரணமாகவே 1978இல் (இனக்கலவரம்), 1983இல் (ஜுலைக்கலவரம்), 1990 களில் என யுத்தமானது நடைபெற்றுக்கொண்டிருந்து. தமிழ் மக்கள் மீதான தாக்குதல், இராணுவக்கெடுபிடிகள், பாலியல் பலாத்காரம் காரணமாகவே போர்ச் சூழலானது உச்சம் பெற்றதாகவே இருந்தது. 1975 களில் இருந்தே பெரும்பான்மையினர் பல அட்டூழியங்களைச் செய்ததன் காரணமாக யாழ்ப்பாணச்சமூகமும் ஏனைய சமூகங்களும் உளத்தாக்கத்திற்கு உட்பட்டனவாக விளங்கின என்றால் மிகையாகது. யுத்தமென்பது எந்த அளவிற்கு தவிர்க்க முடியாததொன்றாக ஆகிவிட்டதோ, அந்த அளவுக்கு யுத்தத்தால் விளையும் பாதிப்புக்களும் தவிர்க்கமுடியாதனவாகிவிட்டன.
  கு.ம.சண்முகலிங்கத்தின் அனைத்து எழுத்துருக்களும் சிறப்பானவையாக விளங்குவதோடு அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், மண்சுமந்த மேனியர் என்பன ஈழத்துத்தமிழர்களின், எண்பதுகளின் வரலாற்றுக்கான முக்கியமான கலைப்பதிவாகும். மண்சுமந்த மேனியர்-(1985) முதல் எந்தையும் தாயும் வரை(1992) உள்ள நாடகங்கள் “யாழ்ப்பாணத்தின் போர்க்கால வரலாற்றுக்கான அரங்கியற் பதிகைகளாகும”. பலர் எடுத்துப்பேசத் தயங்கிய பல விடயங்களைச்குழந்தை ம.சண்முகலிங்கம்அவர்கள்; ஒளிவு மறைவின்றி எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, மாதொருபாகம்,வேள்வித்தீ, மண்சுமந்த மேனியர், நீ செய்த நாடகமே, நரகொடு சுவர்க்கம் போன்ற பல நாடகங்கள் மூலம் அலசினார் எனலாம். அந்தவகையில் அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் என்பன மிக முக்கியமான நாடகப் படைப்புகளாக உள்ளன.
இக்கட்டுரையை பொறுத்த வரையில் ஈழத்து நவீன நாடக வரலாற்றில் 1985களில் எம் அனைவரையும் மண்சுமந்த மேனியர் எனும் நாடக எழுத்துருவின் ஊடாக திரும்பிப்பார்க்க வைத்த குழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்களுள் முதன்மையான அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடக எழுத்துருக்களை மாத்திரம் மதிப்பீடும் நோக்கிலேயே பயணிக்கின்றது.
        போர் ஏற்படுத்திய மனவடுக்களை அன்னையிட்டதீ நாடகஎழுத்துரு கூற எந்தையும் தாயுமானது போரின் காரணமாக சொந்த, பிறந்த மண்ணில் வாழாது தனது பெற்றோரை தனிமையில் இட்டுச் செல்லும் பிள்ளைகள்; வெளிநாடுகளில் வாழ்வதனை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
   தொண்ணூறுகளில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு ஆட்பட்டு  உளவடு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தும் வகையிலேயே இவ்வெழுத்துருக்கள் (அன்னையிட்ட தீ நாடகம், எந்தையும் தாயும்) அமைந்துள்ளன என்றால் மிகையாகாது.
    ஈழத்திலே நாடகத் தலைமுறையொன்றின் தாயென கார்த்திக்கேசு சிவத்தம்பி(1932- 2011.07.06) அவர்களால் வர்ணிக்கப்படும் மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்களின் பெரும்பாலான நாடக எழுத்துருக்கள் சமூக, அரசியல், போர்க்கால உளவியல் நாடகங்களாக உள்ளதோடு மக்களின் சமகாலப்(1980-2009) பிரச்சினைகளை பேசுவதை  அடிப்படையாகக் கொண்டிருந்தது”. குழந்தை ம.சண்முகலிங்கம் எழுதிய சமூக உளவியல் நாடகங்களுள் அன்னையிட்ட தீ நாடகம்(1990), எந்தையும் தாயும்(1992) என்பன மிக முக்கியமான நாடக எழுத்துருக்களாக உள்ளன. “இவ்விரு நாடக எழுத்துருக்களும் சமூகம் சமுதாயம் பற்றிய செய்திகளை எவ்வளவு ஆழமாகவும் உண்மையாகவும் திறம்படவும் சொல்லப்பட்டிருக்கின்றது என்ற அடிப்படையிலேயே இவ்விரு நாடக எழுத்துருக்களையும் மையமாகக் கொண்டு இக் கட்டுரையானது நகர்கின்றது.
 போர்ச் சூழலில் வாழும்; குறிப்பாக வடக்கு (வன்னி, முல்லைத்தீவு கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார்), கிழக்கு மக்களின் மன அழுத்தங்களைப் பற்றியே இவ்விரு நாடக எழுத்துருக்களும் பேசுகின்றன. இவ்வகையில் நோக்கும் போது ஈழத்து தமிழ் அரசியல் நாடக வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டமாக மயில்வாகனம் சண்முகலிங்கம் அமைவது தெரியவரும். பேராசிரியர் கந்தசாமி கணபதிப்பிள்ளை ஈழத்து தமிழ் நாடகத்தின் அரசியல் நாடக வளர்ச்சியிற் (துரோகிகள், தவறான எண்ணம், சங்கிலி) பெறும் இடத்தினையும் நாம் அறிவோம். குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகங்கள் அந்த வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு அதாவது மண் சுமந்த மேனியர், வேள்வித்தீ, அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும், யார்க்கெடுத்துரைப்பேன் போன்ற நாடக எழுத்துருக்களுக்கூடாக எமது சமூகத்தை சண்முகலிங்கம் அவர்கள் பார்த்துள்ளார் எனலாம்.
   குழந்தை ம. சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் சார் நாடக எழுத்துருக்களான அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய இரு  நாடகங்களின் மதீப்பீட்டின் நோக்கம் என்னெவெனில், இவ்விரு நாடக எழுத்துருப் பாத்திரங்கள் அனைத்தும் (அன்னையிட்ட தீ,எந்தையும் தாயும்) உளவியல் தாக்கத்தை உள்வாங்கியும் எமது சமூகத்தை ஆற்றுப்படுத்தப்படும் வகையிலும் நாடக ஆசிரியரால் படைக்கப்பட்டுள்ளனவாக அமைகின்றன. இன்றைய இளம் சந்ததியினர் இவ்விரு நாடக எழுத்துருக்களையும் படிக்கும் போது தத்தம் உள நெருக்கீடுகளிலிருந்து விடுபடுவர் என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில், இவ்விரு நாடக எழுத்துருப் பாத்திரங்கள் அனைத்தும் ஆற்றுப்படுத்தப்படும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்றால் மிகையாகாது. சண்முகலிங்கம் அவர்கள் நாடக எழுத்துருக்களை எழுதும் போது தான் தனித்து நின்று எழுதாது ஏனையோருடன் கூடிக்கலந்துரையாடி சமூகத்திலுள்ள யதார்த்தப் பிரச்சினைகளையே நாடமாக்கினார். குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் உள மருத்துவர் தயா சோமசுந்தரம், சிவயோகன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னரே அன்னையிட்டதீ, எந்தையும் தாயும், வேள்வித்தீ, ஆர் கொலோசதுரர் போன்ற நாடகங்களை எழுதினார் எனலாம்.
    உளவியல் தாக்கமானது மனிதன் பிறந்த காலத்திலிருந்து இறக்கும் வரை அவன் பல்வேறு வகையான உளவியற் தாக்கத்திற்கு உட்பட்டவனவாக விளங்குகின்றான். குழந்தை ம.சண்முகலிங்கத்தின் எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ நாடகமானது தொண்ணூறுகளில் வாழ்ந்த மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளை அதாவது தொண்ணூறுகளில் வாழ்ந்த பலர் போர்ச்சூழலினால் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதையும், போர்ச்சூழலுக்கு எவ்வாறு முகம்கொடுக்க வேண்டும் என்பதையும் இவ்விரு நாடகப் பாத்திரங்களுக்கு ஊடாக நாடகாசிரியர் புலப்படுத்த விரும்புகின்றார். இந்த எந்தையும் தாயும்,அன்னையிட்ட தீ நாடகமானது இன்று உள்ள சமூகங்களுக்கு எவ்வாறான தீர்வை கொடுக்கப்போகின்றது என்பதே இக் கட்டுரையின் நோக்கமுமாகவுள்ளது.
 தொண்ணூறுகளில் நிகழ்ந்த பயங்கரவாதப் போர்ச்சூழலும், இராணுவக்கெடுபிடிகளும், இராணுவ அடக்குமுறைகளும், படையினரின் பாலியல் பலாத்காரமும், யுத்தகளத்தில் பலரை வெட்டுவதும், கொல்லுவதுமான செயற்பாட்டை பெரும்பான்மையினர் செய்ததன் காரணமாகவே பல இலக்கியப் படைப்புகள் (நாடகப்பிரதிகள் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், பாடல்கள்) தோன்றக்காலாயின.
   உளவியல், உளமருத்துவம், உளவளத்துணை பற்றிய அறிவினை, அறிஞர் பலருடன் கூடிக்கலந்துரையாடி பல தகவல்கள் பெற்றுக்கொண்டும் பார்த்த தனது அனுபவத்துக்கு ஊடாகவும்குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் போர்க்கால உளவியல் நாடகங்களை எழுதத் துணிந்தார் என்றால் மிகையாகாது.
    இந்த வகையில் சண்முகலிங்கம் அவர்களுக்கும் சிவயோகனுக்கும் துணை புரிந்தவர்களில் வைத்திய கலாநிதி டீ.ஜே.சோமசுந்தரம், அருட்தந்தை சா.ம.செல்வரத்தினம், அருட்தந்தை எஸ்.டேமியன், வைத்திய கலாநதி இ.சிவசங்கர் (உளவியல், உளமருத்துவம்) ஆகியோரது பணி அளப்பரியதாகும். யுத்தத்தின் பின்னரான பலவிதமான உளப்பாதிப்புக்களுக்கு உட்பட்ட பலர் பற்றிய ஆய்வுத் தகவல்களை பெற்றுக் கொண்டனர்.  இத்தகையோர் சிலரே அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகத்தின் கதை மாந்தராகவிருப்பதனால், அத்தகவல்களை மிகவும் கவனமாக ஆராய்ந்து எடுத்தனர்.
  இக்கற்றலில் மூன்று மாதம் ஈடுபட்டனர். சண்முகலிங்கத்தின் அன்னையிட்ட தீ,எந்தையும் தாயும் என்பன கூட்டு முயற்சியினால் கலந்துரையாடி படைக்கப்பட்ட நாடகமாகவுள்ளது.
    ஈழப்போரில் பாதிக்கப்பட்ட மக்களை உயிரோட்டமாக இந்நாடகப் பனுவல்களில் படைத்திருப்பதோடு (அன்னையிட்டதீ, எந்தையும் தாயும், வேள்வித்தீ) அவர்கள் எவ்வாறு வாழத்தலைப்பட வேண்டுமென்றும் பல இடங்களில் நாடகாசிரியரால் கூறப்படுகின்றது. சண்முகலிங்கத்தின் மாதொருபாகம் நாடகத்தில் வரும் பெண் பிள்ளை பாத்திரமானது ஒரு தடவைதான் பேசுகிறது. உண்மையில் அது பேசவில்லை, கூக்குரலிட்டுக்கத்துகிறது. நாடகம் முழுவதும் அந்தப்பிள்ளை தாயின் காலடியில் குந்தியிருக்கும். ஒரு கட்டத்தில் மட்டும் அவர்கள் கூட்டமா வாரார்கள், கத்தி பொல்லுகளோடு வாரார்கள் என்றவாறு அதிர்ச்சியுற்றுக் கத்தி விட்டு பொத்தன அறிவு கெட்டு விழுவாள். தாய்,சகோதரிகள் சாந்தப்படுத்தப் பேய் அறைந்தவள் போல இருப்பாள்.
  கொழும்பில் இனக்கலவரத்தின்(1978) போது குடும்பத் தலைவனைப் பறிகொடுத்து விட்டு யாழ்பாணத்தில் வந்து வாழும் ஒரு குடும்பத்தின் கதைதான் மாதொரு பாகம் நாடகமாகும். குறித்த இந்தப்பெண் பிள்ளையை தமிழ் சமூகத்திற்கு ஒட்டு மொத்தமான சிங்களச் சமூகம் மீதுள்ள அச்சத்தை வெளிக்காட்ட உதவும் பாத்திரமாகவே இந்தப்பாத்திரத்தை படைத்துள்ளார் என்றால் மிகையாகாது. இந்நாடகமானது சிவயோகன், பாடசாலை நாடகப் பொறுப்பாசிரியர்கள், மாணவர்கள் யாவருடனும் கலந்துரையாடி எழுதப்பெற்ற நாடகமாக உள்ளது. மாதொரு பாகம் நாடகத்தை இவ் விடத்தில் கூற வந்ததன் காரணம் என்னவெனில் முதன் முதலில் உளவியல் பாத்திரமானது ஏழு நாடகதொகுப்பில் உள்ள சண்முகலிங்கத்தின் நான்கு நாடகங்களுள் ஒன்றாக உள்ளடங்கும் மாதொருபாகம் எனும் நாடக எழுத்துருவின் ஊடாகவே வெளிவருகின்றது என்றால் அது மிகையாகாது.
              ஏழு நாடகத் தொகுப்பில் உள்ள சண்முகலிங்கத்தின் நான்கு நாடகங்களாக மாதொருபாகம், தாயுமாய் நாயுமானார், புழுவாய் மரமாகி, எங்கள் தவப்பயன் என்பன உள்ளன. “நாடகத்தை நோய்தீர்க்கும் முறையாக (Theraphy) பாவிக்கும் முறையினை ஈழத்து தமிழ் நாடக உலகில் சண்முகலிங்கம் கையாள்கின்றார் என்றால் மிகையாகாது.
     சண்முகலிங்கத்தின் அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் என்பன போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாந்தரது மனப்பாதிப்புக்களை காட்டும் நாடகமாக உள்ளது. ஏன் உளவியல் சார் நாடகமாக அன்னையிட்ட தீ நாடகத்தையும், எந்தையும் தாயும் நாடகத்தையும் பேசுகின்றோம், யாதெனில் இவ்விரு நாடகப்பாத்திரங்கள் தம் உள்ளக்குமுறல்களையும், மன அவஸ்தைகளையும் கூறுவதாகவுள்ளதோடு உளவியற் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு மீண்டெழ வேண்டும் என்பதையும் நடைமுறைகளையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் கருதிக்கொண்டு வாழத்தலைப்படவே இவ்விரு நாடகங்களும் பலருக்கும் உதவுகின்றன எனலாம்.
    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் உளவியல் தாக்கத்திற்கு உட்பட்டவனாகவே விளங்குகின்றான் என்றால் அது முற்றிலும் உண்மையாகும். இவ்விரு நாடகங்களையும் இக்காலப்பகுதியில் வாசிக்கும் மக்கள் தத்தமது உளத் தளைகளிலிருந்தும், உளப்பிணியிலிருந்தும்,தளை நீக்கலிலிருந்தும் வெளிவரலாம் என்பதை சில நாடகப் பாத்திரங்களுக்கூடாக படைத்திருக்கின்றார்.
       அன்னையிட்ட தீ நாடகத்தில் வரும் தவநாதன், நிர்மல், ஜானகி, புனிதா போன்ற பாத்திரங்களுக்கு ஊடாகவும் எந்தையும் தாயும் நாடகத்தில் ஐயாத்துரை, கண்ணன், வசந்தி போன்ற பாத்திரங்களுக்கு ஊடாகவும் சமூகங்கள் தலைப்பட்டு தங்கள் வாழ்க்கையைச் சந்தோசமாக தேடிக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை நாடகப்பாத்திரங்களுக்கூடாக நாடகாசிரியர் வெளிக்காட்டியுள்ளார் என்றால் அது மிகையாகாது.
    உளத்தினை திருப்திப்படுத்தும் வகையிலேயே அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடக எழுத்துருக்கள் விளங்குகின்றன. மனிதர்களது உளவியலை ஏனையவர்களுக்கு எடுத்துக்கூற உளவியல் நாடகங்கள் முக்கியமாகின்றன.எந்தையும் தாயும் நாடகத்தில் சங்கரப்பிள்ளை,ஐயாத்துரை,செல்வரெட்ணம்,மகேஸ்வரி போன்ற பாத்திரத்தின் உள்ளக்குமுறல்களையும் உளவியல் தன்மைகளையும்  ஏனையோருக்கு எடுத்துக் கூறுவதாகவே நாடகம் படைக்கப்பட்டுள்ளது எனலாம். குழந்தை.ம.சண்முகலிங்கத்தின் அன்னையிட்ட தீ நாடகமும், எந்தையும் தாயும் நாடகமும் இன்றைய சமூகத்திற்கு தேவையான நாடக எழுத்துருக்களாக இருப்பதன் காரணமாகவே இந் நாடக எழுத்துருக்களின் மகோன்னதங்களை உங்கள் முன் விபரிக்கின்றேன்.
அன்னையிட்ட தீ, எந்தையும் தாயுமாகிய நாடக எழுத்துருக்களுக்கூடாக மன அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் எமது சமூகம் எவ்வாறு மீண்டெழ வேண்டும் என்பதை நாடகப்பாத்திரங்களுக்கூடாக நாடக ஆசிரியர் கூறுகின்றார்.
“அன்னையிட்ட தீ  நாடக இறுதியில் மனவருத்தங்களைப் போக்கிக்கொள்ள மானபங்கப்பட்ட “பொம்பிளை பிள்ளையளே தங்கட கதையைச் சொல்ல வேண்டிய துணிவு தேவைப்படுகிற இந்த நேரத்திலை என்ற கதையொரு புதினமே, ஆயிரத்திலை, பத்தாயிரத்திலை ஒன்று தானே என வாகீசன் பாத்திரமானது கூறுகின்றது. சண்முகலிங்கத்தின் உளவியல் நாடகமான அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் என்பன இன்றைய இளம் சந்ததியினருக்கு தேவையானதொரு படிப்பினையை உணர்த்துகின்றது.
இன்று பலர் உளவியற் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதன் காரணமாகவே இந் நாடகப்பிரதியின் தேவையும், முக்கியமும் புலப்படுவதை எண்ணி இக்கட்டுரையினை விபரிக்கின்றேன்.
குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் முதன் முதலில் அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய உளவியல் நாடகங்களை எழுதியவராகவும் இவ்விரு நாடகங்களையும் பார்த்து ரசித்த மக்கள் பலரால் மீண்டும் மீண்டும் பல இடங்களில் இது மேடையேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது என்பது உண்மையேயாகும். இன்றைய காலகட்டத்தில் மனோவியல் ரீதியாக பாதிக்கப்பட்டோர் இனங்காணப்பட்டு அதற்குரிய நிவாரணம் பெறும் வழியையும் புலப்படுத்துவதாக இந் நாடகம் உள்ளது.
    யுத்தமானது வடக்கு கிழக்கு மாகாணங்களிலே குறிப்பாக வடக்கு மாகாணங்களுக்குட் பட்ட அனைத்து மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலுள்ள படுவான்கரை பிரதேச மக்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாவரும் அறிவர். இவ்விரு நாடக பாத்திரங்கள் அனைத்தும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.
   அன்னையிட்ட தீ நாடகமானது மங்கை பாத்திரத்தின் கணவனை இனக்கலவரம்(1977), புருசனைப் பலி எடுக்க 1987 இல் செல் மழை மங்கையின் பிள்ளையை பலி எடுக்க, வாசீகனின் அப்பா அம்மாவை 1977 கலவரம் பலி எடுத்தது என நாடகப்பிரதியில் நாடகாசிரியரால் கூறப்படுகின்றது.
  எந்தையும் தாயும் நாடகத்தில் சங்கரப்பிள்ளையின் மனைவியை (கனகம்மா) பலியெடுத்ததன் காரணமாக கனகம்மாவின் பதினொரு பிள்ளைகளும் வெளிநாடுகளுக்குப் போயினர் என்பதை ஊகிக்க முடிகிறது.
    யுத்தத்தின் காரணமாக இடப் பெயர்வினால் பல மக்கள் சொந்த மண்ணை, மனையை விட்டு வேறொரு இடத்தில் வந்து குடியேறினர்.  அன்னையிட்ட தீ நாடகமானது மிகக் குறுகிய கால பயிற்சியுடன் (ஆக 26 நாட்கள்) முதல் அளிக்கையை கைலாசபதி கலையரங்கில் அழைப்பு விருந்தினருக்குஅளிக்கை செய்தனர் (27.07.1992, 02.08.1992).
  அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இந் நாடகம் காட்சிப்படுத்தபட்டது என்பதும் உண்மையாகும். ஈழத்து நாடக அரங்கில் அரசியல் நாடகங்களை எழுதியவராக க.கணபதிபிள்ளை விளங்க சமூக உளவியல் நாடகங்களை படைத்தவராக குழந்தை ம.சண்முகலிங்கம் விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மேலத்தேயத்தில் நாடகங்களை சிகிச்சைக்காக பயன்படுத்தியவராக ஆட்டாவூட் (பிரான்ஸ்), அகஸ்தாபோல் (இலத்தீன் அமெரிக்கா) அமைய ஈழத்தில் இப்பணியை குழந்தை ம.சண்முகலிங்கம், க.சிதம்பரநாதன் செய்தது வரவேற்கத்தக்க விடயமாகும்.
    சண்முகலிங்கமவர்கள் தனது அன்னையிட்ட தீ, எந்தையும் தாயும் நாடக எழுத்துருக்களுக்கு ஊடாக ஏனையவர்களை குறிப்பாக எமது சமூகத்தை ஆற்றுபடுத்துகின்றார் எனலாம். “ஆற்றுபடுத்தும் பேறு மிக முக்கியமான பேறாகும்”. தமது நாடக பாத்திரங்களுக்கூடாக உலகிலுள்ள மக்களையும் (கனடா, சுவிற்சர்லாந்து, லண்டன்) இலங்கையிலுள்ள  தமிழ் மக்களையும் ஆற்றுபடுத்துகின்றார். சண்முகலிங்கத்தைப் போன்று நாடக ஆர்வம் உள்ளவர்கள் உளவியல் சார்ந்த நாடகங்களை படைத்தால் நாடக கலையினால் மனித சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என கூறுகின்றேன்;.
மனிதர்களாகிய நாமனைவரும் ஏனைய மனிதர்களை மனதளவில் திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.
பாக்கியராஜா மோகனதாஸ்
துறைநீலாவணை
நன்றி தமிழ்முரசு Tamil Murasu

Kälam / Memory / Kulanthai M. Sanmugalingam / I am part of that

அன்னை இட்ட தீ -நாடகம்

எந்தையும் தாயும் நாடகம்-1

எந்தையும் தாயும் நாடகம் -2

எந்தையும் தாயும் நாடகம்

'ஆரொடு நோகேன்' நாடகம் Part - 1

'ஆரொடு நோகேன்' நாடகம் Part - 2

கண்டறியாத கதை - சிறுவர் நாடகம்

பஞ்ச வர்ண நரியார் சிறுவர் நாடகம்

கற்பனை கடந்த சோதி... | ப. ஸ்ரீஸ்கந்தன் | Jan 2022

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நெடும்பயணம் | சோ. பத்மநாதன் | Jan 2022

90 வயதைக் கடந்த குழந்தை: கூடிப் பழகிய கால நினைவுகள்! | த. சர்வேந்திரா

குழந்தை ம. சண்முகலிங்கமும் திருமறைக் கலாமன்றமும் | யோ. யோண்சன் ராஜ்குமார் |

அளப்பெருங்கருணை பேராது நின்ற பெருங்கருணைப் பேராறு | நா. நவராஜ்

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் மொழிபெயர்ப்புகள் | நா. நவராஜ்

சண்முகலிங்கம்! எமக்குள் எழுந்த உலகத்தர நாடக ஆசான் | இராசையா லோகாநந்தன்

சமகால நாடக உலகில் பன்முக ஆளுமையாக குழந்தை ம.சண்முகலிங்கம்

காலம் சஞ்சிகையின் குழந்தை ம. சண்முகலிங்கம் சிறப்பிதழ் வெளியீட்டின் காணொலி

அமரர் தெய்வத்திரு குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களின் ஆத்ம வணக்கம்

அஞ்சலியுரை பேராசிரியர் சி.மௌனகுரு

'குழந்தை' ம.சண்முகலிங்கம் நினைவுப் பகிர்வும் அஞ்சலியும்

தமிழ் நாடகத் துறையின் பேராளுமை I வணக்க நிகழ்வு I PARIS