அண்ணாவியார் இளைய பத்மநாதன்

முழுப்பெயர் அண்ணாவியார் இளைய பத்மநாதன்
பிறந்த திகதி 05 – 01 – 1938.
மாவட்டம், நாடு யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சியில் நெல்லியடி
இணையதளம் https://www.annaviyar.com/about-us/
அண்ணாவியர் இளைய பத்மநாதன்

நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இளையதம்பி பத்மநாதன் அவர்கள் அந்த மண்ணுக்கே உரித்தான புரட்சிகரச் சித்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டு சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டார். இதன் ஒரு அங்கமாக நாகரட்ணம் என்பவரது தலைமையில் இயங்கி வந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் வேலைத்திட்டங்களில் முன்னின்று உழைத்து பல இன்னல்களுக்கு உள்ளானார்.

கந்தன் கருணை என்ற நாடகமே பத்தண்ணா அண்ணாவியம் செய்து மேடையேற்றிய முதல் நாடகமாகும். நெறியாள்கை என்பது ஒரு தொழில்சார் சொற்றொடராக இருக்கிறது என் றும் நாடகக்கலை எல்லோரும் கூடி, ஆடிப்பாடிப் பயில்வது என்பதால், அண்ணாவியம் என்ற சொல்லே மிகவும் பொருந்தமானது என்று பத்தண்ணாதான் அண்ணாவியம் என்ற சொல்லை எனக்கு அறிமுகம் செய்தார்.

கந்தன் கருணை நாடகத்தின் மூலப் பிரதியை இரகுநாதன் எழுதியிருந்தார். அந்தப் பிரதியில்மாற்றங்கள் செய்து, ஆடல் பாடல்களை இணைத்து காத்தவராஜன் இசை மெட்டில் கந்தன் கருணை நாடகத்தைப் பத்தண்ணா மேடையேற்றினார். நெல்லியடி சண்முகானந்தா சபாவில் வருடப் பிறப்பை முன்னிட்டு நடைபெறும் விழாவில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டது. அந்நாடகத்தில் சிவபாதம் முருகனாகவும் நவிண்டில் சிவராஜா சூரனாகவும் நெல்லியடி சிவராஜா நாரதராகவும் சோதி பக்தராகவும் நடித்திருந்தனர். சாதிப் பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்நாடகத்துக்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் கிராமம் கிராமாகச் சென்று ஏறத்தாள 25 தடவைகள் கந்தன் கருணை நாடகத்தை பத்தண்ணா மேடையேற்றினர். அம்பலத்தாடிகள் என்ற பெயரில் இந்த நாடகக் குழு இயங்கியது.

சில கிராமங்களில் இவர்கள் பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. பிரபல்யமான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வீதியில் இந்நாடகம் மேடையேறிய போது நடிகர்கள், குண்டர்களால் கல்லெறிக்கு உள்ளாகினர்.பின்னர், கந்தன் கருணை நாடகம் மாற்றங்கள் செய்யப்பட்டு நடிகர் ஒன்றியத்தினரால் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது. தாசீசியஸ் அண்ணாவியம்செய்த இந்நாடகத்தில் பக்தராகப் பத்தண்-ணாவும், சூரனாக நவிண்டில் சிவராஜாவும் முருகனாக மௌனகுருவும் மற்றும் நீர்வேலி முத்துலிங்கம் நாரதராகவும் நடித்திருந்தனர். கொழும்பில் இந்நாடகம் பழகிய நாட்களில் மௌனகுரு, தாசீசியஸ் மூலமாக கூத்து மெட்டுக்கள் மீதான ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடும் பத்தண்ணா பல்வேறு கூத்து மெட்டுக்களையும் தனது அனைத்து நாடகங் களிலும் அழகாகப் பயன்படுத்தினார்.கந்தன் கருணை நாடகத்தின் பின்னர் அம்-பலத்தாடிகள் ஏகலைவன் என்ற நாடகத்தை மேடையேற்றினர். இந்நாடகத்தை பத்தண்ணா எழுதி அண்ணாவியம் செய்திருந்தார்.

இந் நாடகம் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மாணவிகளைக் கொண்டும் மேடையேற்றப்பட்டது. நண்பர் சிவம் மூலமாக இந்நாடகத்தின் வீடியோ பிரதியைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. குதிரை வீரர்கள் வருவது, போர்க்காட்சிகள் எல்லாம் ஆட்டமாக நிகழ்த்தப்படும். வேடர்கள் காத்தவராஜன் இசைமெட்டிலும், பஞ்சபாண்டவர் மன்னார் கூத்து இசையிலும், பீமர் போன்றோர் தென்மோடியிலுமாக வேறுபட்ட இசைவடிவங்களை அந்நாடகத்தில் சேர்த்திருந்தார். நாட்டுச் சூழல் காரணமாக தமிழ் நாட்டுக்குச் சென்ற பத்தண்ணாவுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி மூலமாக மதறாஸ் பல்கலைக்கழக தலைமை பேராசிரியரான டாக்டர். அரசுவின் தொடர்பு கிடைத்தது. அந்நாட்களில் டாக்டர். அரசு பல்கலை அரங்கம் என்ற நாடகக் குழுவை நடாத்திப் பல நாடகங்களை மேடையேற்றி வந்தார்.

இந்நாட்களில் பத்தண்ணா பல ஊர்களுக்குச் சென்று தெருக்கூத்துக்களை பார்த்தார். தெருக்கூத்துக் கலைஞர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டார். புதிய புதிய மெட்டுக்களை மனதில் பதித்தார். பண்ணிசை தொடக்கம் சொற்கட்டுக்கள் வரை எல்லா இசை வடிவங்களையும் கேட்டார். வெறியாட்டம், சிலம்பாட்டம், வாள் அமலை, கரகாட்டம், காவடியாட்டம், பரதம் மற்றும் கூத்துவகைகள் என்று அனைத்து ஆட்டவகைகளையும் அறிந்து கொண்டார். இவ்வாறு தான் அறிந்து கொண்ட ஆட்டங்களையும், இசை மெட்டுக்களையும் தனது நாடகங்களில் பயன்படுத்தியதால் இவரது நாடகங்கள் புதுமையான, புதிதான வடிவங்களில் அமைந்திருந்தன. தமிழ் நாட்டில் தனது முதல் நாடகமாக, பல்கலை அரங்கத்தினருக்காக, டாக்டர் நந்தியின் ‘கண்களுக்கு அப்பால்’ என்ற சிறுகதையை நாடகமாக்கிப் பத்தண்ணா மேடையேற்றினார்.

மெரீனா கடற்கரையில் இடம்பெற்ற இந்நாடகத்தில் நடித்த நடிகர்களைப் புதிய நாடக வடிவத்துக்கு இசைவாக்க பெரும் பயிற்சி கொடுத்தாக அவர் குறிப்பிடுகிறார். அடுத்த நாடகமாக பிரெக்டின் The Exception and the rule – ஒரு பயணத்தின் கதை என்ற நாடகத்தை வட்டக்களரி வடிவ அரங்கில் மேடையேற்றினார். வட்டமாகப் பார்வையாளர்கள் இருந்ததால் முதலாளி பாத்திரத்தை மூவரும், கூலி பாத்திரத்தை மூவரும், வழி காட்டி பாத்திரத்தை மூவரும் மற்றும் ஏனைய பாத்திரங்களையும் மூவர் மூவராக மூன்று திக்குகளில் நின்றவாறு நடித்தனர். இதனது பாடல்கள் வசந்தன் கூத்து மெட்டில் அமைந்திருந்தன.

அடுத்து இந்திய தேசிய நாடகப் போட்டிக்காக தமிழ்நாடு சார்பாக ‘தீனிப்போர்’ என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நாடகத்தை பத்தண்ணா எழுதி அண்ணாவியம் செய்திருந்தார். ஆறு மாதங்களாகப் பயிற்சி செய்து இந்நாடகம் வீதிக்களரி (சான்ற்விச் தியேட்டர்) வடிவில் கர்நாடகா மாநிலத்தில் மேடையேற்றப்பட்டது. கோயில்களில் சூரன் போர் நடப்பது போல் 80 மீற்றர் நீளத்துக்கு இருபக்கமும் பார்வையாளர்கள் நிற்க இந்நாடகம் அரங்கேறியது.

வர்க்கப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்நாடகம் நாட்டு மிருகங்களுக்கும் காட்டு மிருகங்களுக்கும் பிரச்சனை ஆரம்பமாகிப் பின் பிரச்சனை தாவரப்பட்சிகள் – மாமிசப் பட்சிகள் என்று மாறி இறுதியில் சகோதரச் சண்டையில் முடியும் அரசியலைச் சொல்லியது. நாட்டு மிருகங்களின் பிரதிநிதியாகக் காளை மாட்டையும், காட்டு மிருகங்களின் பிரதிநிதியாக சிங்கத்தையும் வாகனங்கள் போல் தோளில் சுமந்தபடி சூரன் போர் நடத்துவது மாதிரி கப்பல் ஆட்டம், மண்டி போடுதல், யுத்தம் போன்ற ஆட்டங்கள் மற்றும் பாடல்களுடன் நாடகம் இடம்பெறும். பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தை மேடையேற்ற அதீத விருப்பம்கொண்ட இவரது முயற்சிகள் இரு தடவைகள் தடைப்பட்டன.

பருத்தித்துறை மெதடிஸ்ற் கல்லூரி மாணவிகள் இந்நாடகத்தைப் பழகிய நிலையில் இலங்கை இராணுவம் கல்லூரிக்குள் குடிபுகுந்த நிலையிலும், தமிழ் நாட்டில் ஐம்பது பெண்கள் சேர்ந்து பழகிய இந்நாடகம் எதிர்பாராத சூழல் காரணமாகவும் தடைப்பட்டுப் போயின.

1993இல் பத்தண்ணா அவுஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்த பின்னர் ‘ஒரு பயணத்தின் கதை’, இலங்கை வானொலிக்காக கவிஞர் அம்பி எழுதிய ‘யாழ்பாடி’ ஆகிய நாடகங்களை மேடையேற்றினார். இதில் யாழ்பாடி நாடகத்தில் பாணனாகப் பத்தண்ணா நடித்தார். பத்தண்ணாவின் மற்றைய மூன்று நாடகங்களும் எமது அரசியலை மிகவும் தீவிரமாகச் சொல்லின.

‘காத்தவன் கூத்து’ காத்தவராஜன் கூத்து வடிவில் அதே பாத்திரங்கள், அதே கதை ஆனால் பேசிய விஷயங்கள் மட்டும் அரசியலாக இருக்க மேடையேறியது. ‘கழுமரத்தில் நானிருந்தால் பெற்றவளே தாயே, கல்யாணம் யாருக்காக’ என்ற பாடலுடன் காத்தவன் கூத்து முடியும். அடுத்து, கர்ணனின் கதையை ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற தனி நடிப்பு நாடகமாக்கினார்.

ஆயுதங்கள் களையப்படுவதை கர்ணனின் கவசகுண்டலங்களைக் கண்ணன் தந்திரமாகப் பெறுவதோடு இசைவாக்கி அமைக்கப்பட்ட நாடகம். ‘அரசியல் சதுரங்கப் பலியானாய்மகனே’ என்ற குந்திதேவியின் ஒப்பாரியுடன் இந்நாடகம் நிறைவு பெறும். இறுதி நாடகம் ‘தனு’ ஆகும். இதற்கு வில்லு என்ற பொருள். மகாபாரதத்தில் பீமர் இறந்த களத்தை பின்ணனியாகக் கொண்ட நாடகம் இது. ஒரு சுயம்பரத்தில் பீமர் செய்த தவறுக்காக சிகண்டி என்ற பாத்திரம் பழிக்குப் பழியாக பீமரைக் கொல்கின்ற கதை. பெண்ணியம் குறித்தும் இந்நாடகம் பேசியது.

வெறியாட்டம், வாள் அமலை, பரதம், கூத்து அடவுகளும் மற்றும் பண்ணிசை, வடமோடிச் சொற்கட்டுகளும் இந்நாடகத்தில் அமைக்கப்பட்டன. “கண்ணன் ஏவிய கணை, காண்டீபன் கேடயம் அல்ல நான்.  நான் தனு” என்ற வரிகளுடன் நாடகம் முடிவுக்கு வரும். இவரது நாடக பாத்திரங்களான காத்தவன், கர்ணன், தனு என்ற பாத்திரங்கள் யார் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். தீனிப்போர், ஏகலைவன், ஒரு பயணத்தின் கதை, காத்தவன் கூத்து, செஞ்சோற்றுக் கடன், மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம் ஆகிய இவரது ஆறு நாடக நூல்கள் இது வரை வெளிவந்துள்ளன.

இவ்வாறு தன்னைக் கூத்துக்கலையில் ஈடுபடுத்திக்கொண்ட பத்தண்ணா, தனது 60 வயதுக்குப் பிற்பாடு பல்கலைக்கழகங்களில் மேற்கொண்ட நாடக அரங்கு பற்றிய கற்கை நெறிகள் எம்மை ஆச்சரியப்படுத்தும். அவுஸ்திரேலியாவில் உள்ள சுவின்பேர்ண் பல்கலைக்கழகத்தில் நுழைவுக் கற்கை நெறியையும் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் அரங்கியலுக்கான கலைமாணி சிறப்புப் பட்டத்தையும் மோனா~; பல்கலைக்கழகத்தில் Master of Theatre பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் சிலப்பதிகாரத்தில் அரங்கத்திறன் பற்றிய ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு நாடகமே தன் வாழ்வாக வாழ்ந்து வரும் 75 வயது நிரம்பிய ‘இளைய’ பத்மநாதன் என்ற பத்தண்ணா நீடுழி வாழ தாய்வீடு வாழ்த்துகிறது.

நன்றி
தாய்வீடு

அண்ணாவியார் இளைய பத்மநாதன் பற்றிய தகவல்கள்
  1. அரங்கில் தமிழ் அடையாளத்தை வலியுறுத்தும் கூத்துக்கலைஞரும் ஆய்வாளருமான “ பத்தண்ணா “ இளைய பத்மநாதன்! ….. முருகபூபதி

https://akkinikkunchu.com/?p=266507

2.இளைய பத்மநாதனின் அற்றைத் திங்கள்” பண்ணும் பரதமும் விரவிய நாடகக் கூத்து

http://www.tamilmurasuaustralia.com/2013/11/blog-post_3270.html

அரிதாரம்/பக்தண்ணாவின் "கர்ணன்"ஓராள் அரங்கு. இசை நாடகம்./TAMIL THERTRE. performance,karnan,கர்ணன்