
அப்புக்குட்டி ராஜகோபால்
அப்புக்குட்டி ராஜகோபால்
‘இஞ்சேருங்கோ பிள்ளையள் நான்தான் ஆவரங்கால் ஆறுமுகத்தாற்ர பேரன் அப்புக்குட்டி பேசுறன்” என்ற குரல் வானொலியிலும் மேடையிலும் ஒலிக்கும்போது சின்னக் குழந்தைகளும் உடனே சொல்லிவிடும் இது அப்புக்குட்டி ராஜகோபால் அவர்களுடைய குரல் என்று. முன்னொரு காலத்தில் அரச நாடகங்களிலும் அமைச்சர் நாடகங்களிலும் அடுக்குமொழி வசனங்களால் மேடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்க அதே நேரத்தில் யாழ்ப்பாணத்து மொழி என பரிகாசமாகப் பேசப்பட்ட எங்கள் மொழியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை ரசித்துக் கேக்கவைத்த பெருமைக்குரியவர்களில் திருவாளர் அப்புக்குட்டி ராஜகோபால் அவர்களும் ஒருவர்.
ரி. ராஜகோபால் என அழைக்கப்படும் தம்பையா ராஜகோபால் (பிறப்பு: 4 அக்டோபர் 1942), இலங்கையின் புகழ்பெற்ற மேடை, வானொலி நடிகர். ஐநூறுக்கும் அதிகமான நாடகங்களில் நடித்துள்ளார். அப்புக்குட்டி ராஜகோபால் எனவும் இவர் அழைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் ஆரம்பக் கல்வியை மானிப்பாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1959 ஆம் ஆண்டில் குறிப்பாகக் கல்லூரிக் காலங்களில் இல்லப்போட்டிகளின் கலைவிழாக்களில் நடிகனாக கால் பதித்தார். 1960களில் கலையரசு சொர்ணலிங்கத்தின் வழிநடத்தலில் ‘தேரோட்டி மகன்’ நாடகத்தின் மூலம் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தவர். “கோமாளிகள்” நாடகக் குழுவில் யாழ்ப்பாணத் தமிழில் பேசும் ‘அப்புக்குட்டி’ பாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இவரது குடும்பம் ஒரு கலைக்குடும்பமாகும். அண்ணன்களான அரியரட்னம், மெய்கண்டதேவன், இளைய சகோதரர் தயாநிதி (‘நையாண்டி மேளம்’ நடிகர்) ஆகிய அனைவரும் நாடகக் கலைஞர்களே.
இலங்கை வானொலியில் வர்த்தக சேவை, தேசிய சேவை இரண்டிலும் ஏராளமான நாடகங்களில் நடித்த்வர். எஸ்.ராம்தாஸின் ‘கோமாளிகள் கும்மாளம்’, கே. எஸ். பாலச்சந்திரனின்’ கிராமத்துக் கனவுகள்’ போன்ற பல தொடர் நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களிலும், குணசித்திர பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இவருக்கு பெருமை தேடித்தந்த நாடகங்களில் முக்கியமானது ‘கோமாளிகள் கும்மாளம் ஆகும். இது முதலில் நாடகமாக மேடையேறி பின்னர் இலங்கை வானொலியில் தொடராக ஒலித்து தொடர்ந்து ‘கோமாளிகள் என்னும் பெயரில் திரைப்படமாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களிலேயே 99 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது.
1959ல் மேடைக்கலைஞர் ரகுநாதன் அவர்களின் ‘தேரோட்டி மகன்” என்னும் நாடகத்தில் பானுமதி என்னும் பெண் பாத்திரத்தில் நடித்ததின் மூலமாக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய இவர் வானொலி நாடகங்கள் மூலமாகவே பிரபல்யமானார். 1962ம் ஆண்டு முதல் இவர் நடித்த ஏராளமான வானொலி நாடகங்களில் ‘புரோக்கர் கந்தையா” ‘கோமாளிகள்” ‘தணியாத தாகம்” ‘முகத்தார் வீடு” ‘கிராமத்துக் கனவுகள்” போன்றவை பிரபலமானவை. இத்துடன் ‘ஏமாளிகள்” ‘கோமாளிகள்” நெஞ்சுக்கு நீதி” நான் உங்கள் தோழன்” போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
பிரபலமான கலைஞர்களான லண்டன் கந்தையா” புகழ் சாவன்னா. கே.எம்.வாசகர் மரிக்கார் ராம்தாஸ்.உபாலி சந்திரசேகரன். சில்லையூர் செல்வராசன். முகத்தார் யேசுறட்ணம். போன்றவர்களுடன் இணைந்து நடித்த ராஜகோபால் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சிற்கு வருவதற்கு முன்பாகவே தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளான லண்டன்” சுவீஸ்” ‘ஜேர்மனி” ‘டென்மார்க்” ‘கொலண்ட்” ‘கனடா” ‘அமெரிக்கா” என உலகம் சுற்றிய கலைஞராக வலம் வந்ததோடு பிரான்சில் இருந்து ஒலிபரப்பான ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி. ஏ.பி.சி தமிழ் ஒலி. ஆகிய வானொலிகளில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
கே. எம். வாசகர் (புரோக்கர் கந்தையா, பார்வதி பரமசிவம்), எஸ். ராம்தாஸ் (காதல் ஜாக்கிரதை, கலாட்டா காதல்), எஸ். எஸ். கணேசபிள்ளை (கறுப்பும் சிவப்பும்) ஆகியோரின் மேடை நாடகங்கள் பலவற்றில் நடித்தவர்.
1990ல் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தன் கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், பி. எச். அப்துல் ஹமீட், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியவர்.
கலாவினோதன் பட்டம் (கொழும்புக் கலையகம், 1968)
கலாவித்தகன் பட்டம் (கொழும்புக் கலையகம், 1969)
நகைச்சுவை மன்னன் பட்டம் (இலங்கைக் கலாச்சார அமைச்சு 1978)
மண்வாசனைக் கலைஞன் (கொழும்புக் கலைவட்டம் 1978)
ஈழத் தமிழ் விழிகள் விருது (பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்)
“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் கானா பிரபா
“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் கானா பிரபா அவர்கள் October 04, 2017 பதிவேற்றியது.
ஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டின் தவிர்க்க முடியாத அங்கத்தினர்களில் ஒருவராக விளங்கியவர் எங்கள் அன்புக்குரிய அப்புக்குட்டி ராஜகோபால் அண்ணர். மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் திரைப்பட நடிகராக, வானொலிக் கலைஞராகத் தன்னுடைய நடிப்பின் முத்திரையை அகல விரித்த அவர் அதிகம் நெருக்கமானது என்னவோ வானொலிப் பெட்டி வழியாகத் தான்.
ஈழத்துப் பிரதேச மொழி வழக்கின் பொற்காலமாக எழுபதுகளில் செழித்தோங்கிய நகைச்சுவை இயக்கத்தில் மரிக்கார் ராம்தாஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், உபாலி செல்வசேகரன், கே.ஏ.ஜவாஹர், டிங்கிரி (கனகரட்ணம்) – சிவகுரு (சிவபாலன்), முகத்தார் எஸ்.யேசுரட்ணம், “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா, கே.சந்திரசேகரன் என்று நீண்டு தொடரும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தம் தனித்துவமான நடிப்பால் மட்டுமன்றி ஈழத்து மொழி வழக்கைப் பிரயோகப்படுத்திய வகையில் தனித்துவம் கண்டவர்கள். இவர்களோடு முன்னுறுத்தக் கூடிய அற்புத ஆற்றல் மிகு கலைஞர் நம் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர். இங்கே பகிரப்பட்ட கலைஞர்களைத் தாண்டி இன்னும் பல ஈழத்து நாடக, நாட்டுக்கூத்து ஜாம்பவான்கள் சம காலத்தில் இயங்கியிருந்தாலும் நகை நடிப்பு, ஈழத்துப் பிரதேச வழக்கைக் கையாண்ட. நுட்பத்திலும் இந்த வட்டத்தைக் குறுகிக் கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்துத் திரைப்பட வசனங்களுக்கு நிகராக அல்லது அதற்கு மேலாக ஈழத்து நாடக, மேடைக் கலைஞர்களின் படைப்புகள் ஒலி நாடாக்களிலும் வெளிவந்து றெக்கோர்டிங் பார் எங்கும் களை கட்டிய காலமது.
அந்தக் கால கட்டத்தில் இந்திய நகைச்சுவை நடிகர்களைத் தாண்டிய ஒரு ரசனையை ஈழத்து ரசிகர்கள் விரும்பக் காரணம் ஈழத்து நடிகர்களின் பிரதேச வழக்கு சார்ந்த மொழிப் பிரயோகம்.
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்போடு
நாற்பதைக் கடந்த ஒரு கண்டிப்பான அப்பா, கறாரான மேலதிகாரி, அல்லது சிடுமூஞ்சித் தனமாக பக்கத்து வீட்டுக்காரர் இப்படியானதொரு யாழ் மண்ணின்
பாத்திரத்தைக் கற்பனை செய்ய முடிந்தால் அதில் முன் நிற்பவர் நம் ராஜகோபால் அவர்கள்.
கவுண்டமணி காலத்துக்கு முன்பே ராஜகோபால் அண்ணரின் எள்ளல் மிகு நடிப்பை ரசித்திருக்கிறோம் நாமெல்லாம். அதெல்லாம் விரசமில்லாது ரசிக்க வைத்தவை. “அப்புக்குட்டி” என்ற பாத்திரத்தில் அக்காலத்தில் நிகழ் மனிதர்களையும் காணுமளவுக்குத் தத்துரூபமான நடிகர்.
இலங்கை வானொலி நாடகப் படைப்புகள்,
கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் தயாரித்த நாடக ஒலிப்பேழை, கோமாளிகள், ஏமாளிகள் திரைப்படங்கள் போன்றவை இன்னமும் அப்புக்குட்டி ராஜகோபால் பெயர் சொல்லும்.
கோமாளிகள் திரைப்படம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினியில் துண்டுப் படமாகப் பலர் பார்த்திருக்கக் கூடும். அந்தப் படம் இப்போது முழுமையாக YouTube இல் மரிக்கார் ராம்தாஸ் இன் புதல்வரால் வலையேற்றப்பட்டுள்ளது.
தொண்ணூறுகளில் கொழும்பு கிறீன்லண்ட்ஸ்
ஹோட்டலுக்குப் போனால் ஈழத்துப் பிரபலங்களைத் தரிசிக்க முடியுமென்று அடிக்கடி செல்வேன். அப்படியாக மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோரைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் இவரின் நடிப்புலக அனுபவத்தைப் பதிவாக்க வேண்டுமென்ற தீரா ஆசை இன்னமுண்டு.
இன்று அகவை எழுபத்தைந்து காணும் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர் பொன் விழா கடந்த ஈழத்துக் கலைஞர். ஐபிசி தமிழா 2017 இல் வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டவர்.
அவர் குறித்த முழுமையானதொரு ஆவணத் திரைப்படத்தை இன்று ஈழத்தமிழருக்கென இயங்கும் ஈழத்து, புலம் பெயர் தொலைக்காட்சிகள் இயக்க முன் வர வேண்டும். அதில் அவர் பகிரும் தன் கலையுலக அனுபவங்கள் வழி ஈழத்து நாடக மரபின் ஒரு பகுதி வரலாறு பதியப்பட வாய்ப்புக் கிட்டும்.
“மடத்துவாசல் பிள்ளையாரடி” இணைய தளத்தக்கு நன்றி.
http://www.madathuvaasal.com/2017/10/blog-post.html
18 வயதில் குடும்பிகட்டி நாடகம் நடித்த தருணம் - நாடக நடிகர், ஈழத்து ஆளுமை அப்புக்குட்டி ராஜகோபால்.
குத்துவிளக்கு திரைப்படத்தில் நடிக்க சந்தர்ப்பம் வந்த போது!” ஈழத்து ஆளுமை அப்புக்குட்டி ராஜகோபால்.
'அப்புக்குட்டி' ரி.ராஜகோபால் பற்றிய பத்திரிகை செய்திகள்
'அப்புக்குட்டி' ரி.ராஜகோபால் அவர்களுடைய புகைப்படத்தொகுப்பு







