
ரா.குணபாலன்
இரா . குணபாலன்
நடிகர் பாடகர் அறிவிப்பாளர் தயாரிப்பாளர் இது விளை நிலம். இந்த மண்ணில் காலத்திற்குக் காலம் தேவைக்கேற்ற பயிர்கள் விளைந்து கொண்டே இருக்கும். இந்த சோலை வனத்தில் இளைப்பாறிய பறவைகளும், பசியாறிய பறவைகளும் ஏராளம். ஆர்.ரி.எம். பிறதஸ் இன்ரனெசனல் என்னும் நிறுவனம் ஒரு ஆலமரம்.
இந்த நிறுவனம் இதுவரை பதினைந்திற்கு மேற்பட்ட கலை மாலைகளை நடாத்தி பல கலைஞர்களைக் கௌரவித்துள்ளது. பல கலைஞர்களை வளர்த்து விட்டிருக்கின்றது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவர் திரு. இரா-குணபாலன் அவர்கள். இவர் தனது ஒன்பதாவது வயதில் யாழ்-புனிதஸ்த்தர் மகா வித்தியாலயத்தில் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே பாடசாலை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் எடுத்த எடுப்பிலேயே திறமையை வெளிப்படுத்துவதற்குரிய பெரிய பாத்திரங்கள் கிடைத்து விடவில்லை.
முதல் நாடகத்தில் அரசனுக்கு சாமரம் வீசும் பாத்திரம்தான்! அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தோடுதான் வந்தார். ஆனால் இவரின் ஆர்வத்தை முளையிலேயே மழுங்கடிக்கும் விதமாக இவருக்கு ஒப்பனை செய்தவரான திரு. ஸ்ரனில் மாஸ்ற்றர் அவர்கள் நாடகம் பழக்கிய ஆசிரியரைப்பார்த்து ‘ஏன் மாஸ்ரர் இந்தப் பாத்திரத்திற்கு ஒரு சிவலைப்பொடியனைப் போட்டிருக்கலாமே” என நகைச்சுவையாகக் கேட்க, அந்த ஒரு நொடியில் தான் மனமொடிந்த வேதனையை சோகமாக நினைவு கூர்ந்த குணபாலன் அடுத்தவருடம் அதே பாடசாலையின் நாடகவிழாவில் காசியப்பன் நாடகத்தில், இவர் காசியப்பனாக நடிக்க அதே ஒப்பனையாளர் ஸ்ரனில் மாஸ்ற்ரர் அவர்கள் தன்னை அடையாளம் தெரியாமலேயே நல்ல பாத்திரப்பொருத்தம்” என்று பாராட்டியதை இப்பொழுது பெருமைபட மகிழ்ச்சியுடன் நினைவு கொள்கின்றார்.
விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் மிக்கவரான இவர் அந்துறையில் தன்னை நிலை நிறுத்த தனது படிப்பை யாழ் இந்துக்கல்லூரிக்கு மாற்றுகின்றார். ஆனால் இவர் எதிர்பார்த்தபடி விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கமுடியவில்லை. ஆனால் தனது நண்பர்கள் ஜெயராசா டெனிஸ் ஆகியோருடன் இணைந்து ஜே.டி.ஜி. நாடகமன்றம் என்னும் பெயரில் மன்றம் ஒன்றினை உருவாக்கி நாட்டின் பல பாகங்களிலும் நகைச்சுவை நாடகங்களை அரங்கேற்றி வந்தார்கள்.
இவர்களின் ‘காலனை வென்ற தீரன்” என்ற நாடகம் அன்றைய நாட்களில் மிகவும் புகழ்பெற்ற நாடகங்களான ‘அடங்காப்பிடாரி” ‘தம்பி கொழும்பிலே” டிங்கிரி சிவகுருவின் நாடகங்கள் மேடையேறிய மேடைகளில் இணைந்து மேடை ஏறியிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில் அன்று யாழ்ப்பாணத்தில் நாடகத்துறையில் பிரபலமாக இருந்த அமரராகிப்போன கலைக்காவலர் திரு.சி. தர்மலிங்க மாஸ்ற்றர், கலாபூஷணம் நவாலியூர் நா செல்லத்துரை மாஸ்ற்றர், அறிமுகம் தனக்கு கிடைத்தாலும் அவர்களுடைய நாடகங்களில் நடிக்கும் கொடுப்பனவு தனக்கு கிடைக்கவில்லை என்பதை ஏக்கத்துடன் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
ஆனால் புகழ்பெற்ற நாட்டுக்கூத்து அண்ணாவியரான பூந்தான் யோசேப்பு அவர்களிடம் 1978ம் ஆண்டுக் காலப்பகுதியில் கூத்து ஆட்டமுறைகளைப் பழகி அவருடைய ‘கண்டி அரசன்” நாடகத்தில் நடித்ததை பெருமையாக கூறினார். எண்பதாம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் நிமித்தமாக சிங்கப்பூர் மலேசிய நாடுகளுக்குச் சென்ற இவர் அங்குள்ள வேலும் மயிலும் என்ற கலைஞருடன் இணைந்து அங்கும் சில மேடைகளில் தனது திறமைகளைக் காட்டியிருக்கின்றார்.
எண்பத்தி மூன்றாம் ஆண்டு பாரிஸிற்கு வந்த இவருக்கு ஆரம்பகாலம் இவருடைய கலைப்பசிக்கு தீனி போடுவதாக இருந்திருக்கவில்லை. அதற்கு முக்கியமான காரணம் இன்றைய காலகட்டத்தைப்போல அந்த நாட்களில் அதிகமான மக்களோ! அதிகமான கலைஞர்களோ இருந்திருக்கிவில்லை. பாரிஸில் இவர் முதன் முறையாக செய்த கலை நிகழ்ச்சி சச்சிதானந் மாஸ்ற்றரின் பாடசாலையில் இடம்பெற்ற சரஸ்வதி பூசை விழாவில் அறிவிப்பாளராகவும் தனி நடிப்பு நிகழ்ச்சியில் நகைச்சுவை கதம்ப நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தியதும்தான்.
பின்னர் சித்தே யூனிவசிற்றியில் இடம்பெற்ற ஒரு தமிழ் விழாவில் தனி நடிப்பு செய்யச் சென்றிருந்த சமயத்தில் அங்கு நடன நிகழ்ச்சி செய்ய வந்திருந்த திரு தயாளசிங்கம் அவர்களினதும் வேறு சில கலைஞர்களின் தொடர்பும் ஏற்பட்டிருக்கின்றது. கலைஞர் திரு.அரியநாயகம் அவர்களின் தொடர்பு இவருக்கு ஒரு பரிசாகவே அமைந்தது என்று கூறலாம்.
ஏனெனில் திரு.அரியநாயகம் அவர்கள் மேடையேற்றிய பல நாடகங்களில் ஒருசில நாடகங்களைத்தவிர ஏனைய எல்லா நாடகங்களிலும் நடித்திருக்கின்றார். எண்பத்தி ஜந்தாம் ஆண்டுக் காலப்பகுதியில் பாரிஸில் ஆரம்பிக்கப்பட்ட முத்தமிழ் வானொலியில் பணிபுரிந்த வேளையில் ‘புழுகர் பொன்னையா புகழ்” குணபதி-கந்தசாமி. அமரர் கிறெகரி-தங்கராசா பெஞ்சமின் இமானுவல். திருமதி அலன்கோ. திருமதி வளர்மதி-துரைஸ். ஆகியோருடன் எல்லாம் இணைந்து பல வானொலி நாடகங்களில் நடித்திருக்கின்றார்.
இன்று பாரிசில் மிகப் பிரபலமாக விளங்கும் கல்வி நிலையமான ‘பாரிஸ் தமிழர் கல்வி நிலையம்” 1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்போது கல்விமான் திருவாளர் காராளபிள்ளை மாஸ்ற்றர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒன்பது நிர்வாகசபை உறுப்பினர்களில் குணபாலனும் ஒருவர். வானொலிகளை எடுத்துக்கொண்டால் பாரிஸ் முத்தமிழ் வானொலி. எஸ்.கே.ராஜன் அவர்களின் இலங்கைக் கலையகத்தால் நடாத்தப்பட்ட ‘தமிழ் அமுதம்” வானொலி. அதன் பின்னர் புதிய நிர்வாகத்தால் இயங்கிய ரி.ஆர்.ரி தமிழ் ஒலி. தொடர்ந்து ஏ.பி.சி. தமிழ் ஒலியில் முக்கிய பங்காளியாகவும் இருந்து தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
திரு.பிலிப்தேவா அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து ‘பாரிஸ் வீடியோ மலர்” நாடகங்களிலும் நடித்திருக்கின்றார். அதேபோல அமரர் கிறெகரி-தங்கராசா அவர்களின் தயாரிப்பில் வெளியான ஸங்கம்” வீடியோ மலர்களிலும் நடித்திருக்கின்றார். பாரிசில் தயாரான சின்னத் திரைப்படங்களான ஞானம் பீரிஸ் அவர்களின் ‘விடுதலைப் பாதையிலே “நீ ஒரு தெய்வம்” கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் இயக்கத்தில் எஸ்.கே.ராஜன் தயாரித்த ‘இன்னுமொரு பெண்” இவரின் சொந்த நிறுவனமான ஆர்.ரி.எம். பிரதர்ஸ் தயாரித்த ‘முகத்தார் வீடு” மற்றும் ‘பரமபதம்” நாச்சிமார் கோவிலடி ராஜன் தயாரித்த நினைவு முகம்” முத்து ஜெயசிங்கத்தின் ‘தலைமுறை” அருந்ததியின் இயக்கத்தில் ‘முகம்” அமரர் கீழ்க்கரவைப் பொன்னையனின் ‘தீ மழை” டென்மார்க் சண் அவர்களின் ‘தொண்டன்” ஆகிய படங்களில் எல்லாம் நடித்திருக்கின்றார்.
இவரின் ஆர்.ரி.எம் பிரதர்ஸ் சார்பில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற ‘அடங்காப்படாரி” என்னும் நாடகத்தை இங்கு தயாரித்து ஜரோப்பாவின் பல நாடுகளிலும் மேடையேற்றியதோடு தமிழ்நாட்டுக் கலைஞர்கள், சிங்கப்பூர் கலைஞர்களையெல்லாம் அழைத்து பாரிசில் கலை நிகழ்ச்சிகளைச் செய்திருக்கின்றார். அது மாத்திரமல்ல பாரிஸில் ‘இசைபாடும் இரவு” என்னும் நிகழ்ச்சியை நடாத்தி சிறந்த பாடகர்களைத் தெரிவு செய்து அமரர் கிறெகரி தங்கராசா ஞாபகார்த்தமாக தங்கப் பதக்கங்களையும் வழங்கி வருகின்றார்.
இத்தனை திறமைகளையும் சிறப்புக்களையும் கொண்ட கலைஞர் இரா-குணபாலன் அவர்களை இன்று தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் அடையாளம் காட்டிவைத்தது ரி.ரி.என் தொலைக்காட்சியில் கணேஸ்.-தம்பையா அவர்களின் இயக்கத்தில் கலைஞர்கள் சின்னக்குட்டி தயாநிதி. சுதா. ஆகியோருடன் இணைந்து நடித்து 200அங்கங்கள் ஒளிபரப்பான ‘நையாண்டி மேளம்’ நாடகம்தான் காரணம் என்றால் அது மிகையில்லை.
இவருடைய திறமைகளைப் பாராட்டி அண்மையில் திருமறைக் கலா மன்றத்தின் பிரெஞ்சுக் கிளையினர் கௌரவப் படுத்தியிருந்தார்கள். நாமும் இந்தக் கலைஞனை வாழ்த்துவோம்.