
லண்டன் நாடக விழா வெள்ளி விழா 2016
எமது நாடக விழா குறித்து கடந்த வார ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில்…லண்டனில் இளையோர்களை இணைத்து தமிழ் நாடகத்தை உயர்த்தும் தமிழ் அவைக்காற்று கலைக்கழகம்-லண்டன் நாடக விழா வெள்ளி விழா 2016
தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் பிரித்தானியாவில் நாடக விழா நடத்த தொடங்கி இருபத்தைந்து வருடங்கள் நிறைவடைந்த வெள்ளிவிழா ஆண்டான (1991 – 2016) இவ்வருடத்தில் நாடகவிழாவை 23.07.16 அன்று லண்டன், வின்ஸ்டன் சேர்ச்சில் அரங்கில் தனது நாடகப்பள்ளியின் சிறுவர்கள், இளையோர்கள் என்னும் இரு பிரிவினரின் நான்கு நாடகங்களை ஆற்றுகை செய்து கொண்டாடியது.லண்டனில் இருபத்தைந்து வருடங்களாக, தொடர்ந்து வருடாந்த நாடக விழாக்களை நடத்தி வருகின்றனர். 22.06.1991 அன்று லண்டனில் முதலாவது தமிழ் நாடக விழா வால்தம் போரொஸ்ட் அரங்கில் இவர்களால் மேடையேறியது. பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியினரின் முன்முயற்சியில் பலரினதும் கூட்டு உழைப்பில், அன்றில் இருந்து இன்று வரை ஆண்டு தோறும் நாடகவிழாக்களை தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் நடத்தி வருகிறது. இந்த இருபத்தைந்து வருடங்களில் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் புலம்பெயர் தேசங்களில் நடத்தும் அறுபதாவது நாடகவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது. “ஒரு தமிழ் நாடக இயக்கம் அயல் நாட்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாடகவிழா நடத்தி வருவது ஒரு மாபெரும் சாதனை. வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிலும் இவ்வாறு நடந்ததாக வரலாறு இல்லை”. என்று எழுத்தாளரும்; மழை, சூறாவளி போன்ற நாடக பிரதிகளை ஆக்கியவருமான இந்திரா பார்த்தசாரதி விழா மலரில் குறிப்பிட்டது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் என்னும் எமது நாடக குடும்பத்தில் ஒரு அங்கத்தவராக எங்களுடன் பயணித்த, அண்மையில் மறைந்த திருமதி சசிகலா சத்தியமூர்த்தி அவர்களிற்கு இந்த நாடகவிழாவை சமர்ப்பணம் செய்கிறோம் என்று அஞ்சலி செலுத்தி விழா தொடங்கியது. தர்சினி சிவசுதன், ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினார்கள்.
விழாவின் முதல் நிகழ்வாக “புதிய பயணம்” மேடையேறியது. தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் இளையோர்கள் இந்த நாடகத்தை தாமே எழுதி, நெறியாள்கை செய்து அரங்கேற்றியதை ஒரு சாதனை என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் பிறக்கும் இரண்டாம் தலைமுறையினர் எம் தாய்மொழியான தமிழ்மொழியை பேசவே சிரமப்படும் சூழலில் இவர்கள் தமிழில் ஒரு நாடகப்பிரதியை எழுதி இயக்கியிருக்கிறார்கள். பிரித்தானியாவில் வசிக்கும் ஒரு குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு விடுமுறையில் செல்வதை களமாக கொண்டு கதை சொல்லப்பட்டது.
முதன்முதலாக அக்குடும்பத்தின் குழந்தைகள் இலங்கைக்கு செல்கிறார்கள். புதிய சூழலிலும், தமிழ் சரியாக புரியாத நிலையிலும் தொடக்கத்தில் விருப்பமின்றி இருந்தவர்கள் பின்பு தமது பாட்டன், பாட்டியின் அன்பிலும்; தமது உறவினர்களின் தம் வயதை ஒத்த பிள்ளைகளின் தோழமையிலும் தோய்ந்து இனி மீண்டும், மீண்டும் வர வேண்டும் என்ற முடிவோடு பிரிய மனமின்றி பிரிவதை மிக இயல்பாக நடித்துக் காட்டினார்கள். யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ் விளங்காமல் திண்டாடுவதை மிக நகைச்சுவையாக எடுத்துக் காட்டினார்கள். மிக நுணுக்கமாக சிறு விடயங்களைக் கூட எடுத்துக் காட்டியதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்து வைத்தியசாலைகளில் நோயாளிகளின் பெயரை கூவி அழைப்பதைப் போல அச்சொட்டாக கூவி அழைத்த விதத்தை குறிப்பிடலாம்.
சந்தோஷ், செல்வி, ஜனுசன்,லுக்சியா, ஆதிசங்கர், சாருசன், சரிதா, மானசி, அனுசன், கிந்துசா, சிந்து ஆகிய புலம்பெயர் தமிழரின் இரண்டாம் தலைமுறையினர் இணைந்து எழுதி, இயக்கிய “புதிய பயணம்” தமிழர் நாடக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்திருக்கிறது.
ஆறு வழி மறித்தால் நாம் பாலம் அமைத்திடுவோம்
தீயும் வழி மறைத்தால் நாம் நீரை இறைத்திடுவோம்
காடு வழி மறித்தால் நாம் வெட்டிச் சரித்திடுவோம்
சூறை வழி மறித்தால் நாம் மீறி நடந்திடுவோம்
யாரும் எதிர் வரினும் நாம் சோர மறுத்திடுவோம்
மின்னல் இடி விழினும் நாம் எண்ணியது செய்திடுவோம்
மனிதர் மனம் வைத்தால் இந்த மலைகளை அகற்றிடலாம்
மனிதர் இணைந்தாலே இந்த மண்ணையும் மாற்றிடலாம்
என்ற மனதை மயக்கும் கானத்தின் கருப்பொருளான மனிதர்கள் இணைந்தால் இடையில் மலைகளும் மறிக்க முடியாது என்ற சீன நாட்டார் கதையை “மலைகளை அகற்றிய மூடக்கிழவன்” என்று பேராசிரியர் சி. சிவசேகரம் நாடகப்பிரதி ஆக்கியிருந்தார். தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் சிறுவர் பிரிவினர் கதையும், களியாட்டமுமாக இந்த நாடகத்தை தந்தார்கள். கஸ்தூரி, விக்னேஷ், மறவன், அன்சா ஆகியோர் கதை சொல்லிகளாக மழலைத் தமிழில் மகிழ்வித்தனர். அஜய், அருசன், சிரேயா, அவினேஸ், மாசிலன், சச்சின், சஞ்சஜ், வைசவி, ராம்கிரன் ஆகியோர் தமது அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பிலும், அனுபவப்பட்ட நடிகர்களைப் போல காட்சிப்படுத்திய நடிப்பிலும் தம் திறனை வெளிப்படுத்தினார்கள். நடந்தது குழந்தைகள் நாடகம் தான் என்பதை கூடியிருந்தவர்கள் நம்ப முடியாத அளவிற்கு அவர்கள் ஆற்றுகைப் படுத்திய விதம் அமைந்திருந்தது.
அபத்த நாடகங்களின் (Theatre of the Absurd) தந்தையென அழைக்கப்படும் யூஜின் அயனெஸ்கோவின் (Eugene Ionesco) தலை சிறந்த படைப்பான “The Lesson”, பென்னேஸ்வரன், க.பாலேந்திரா ஆகியோரின் தமிழாக்கத்தில் “பாடம்” என்ற நாடகமாக விழாவின் மூன்றாவது நிகழ்வாக வழங்கப்பட்டது. ஒரு நடுத்தர வயது பேராசிரியர் (சந்தோஷ் ஆனந்தன்), அவரிடம் புதிதாக படிக்க வரும் பதின்மவயது மாணவி (செல்வி சற்குணானந்தன்), பேராசிரியரின் உடல்நிலையை பற்றிக் கவலைப்படும் இறுக்கமான முகம் கொண்ட பணிப்பெண் (சரிதா அண்ணாத்துரை) என்ற மூன்று கதாபாத்திரங்களை நாடகம் கொண்டிருந்தது.
கணிதத்தில் தொடங்கும் பாடம் பின்பு மொழியியலிற்கு வருகிறது. அந்த அப்பாவியான மாணவிக்கு எதுவும் விளங்கவில்லை. பேராசிரியரின் கடுமையான முயற்சிகள் தோல்வியடைகின்றன. அவர் ஆத்திரம் அடைகிறார். மாணவியின் உடல்நிலை சீர்கெட்டு பல்வலியாக வெளிப்படுகிறது. பேராசிரியரை அமைதிப்படுத்த பணிப்பெண் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பேராசிரியர் கோபத்தில் மாணவியை கொலை செய்து விடுகிறார். நிலை குலைந்திருந்த பேராசிரியரை தேற்றும் பணிப்பெண் இது நாற்பதாவது என்று நமக்கு அதிர்ச்சி அளிக்கிறார். கதவு மணி மீண்டும் அடிக்கிறது. இன்னொரு மாணவி பேராசிரியரை தேடி வருகிறார். பணிப்பெண் “உள்ளே வாரும்” என்று என்று அந்த புது மாணவியை அழைக்கிறார். நாடகம் ஒரு முழுவட்டம் எடுத்து மறுபடியும் தொடங்கிய இடத்திற்கு வந்து நிற்கிறது.
அதிகாரத்தின் கொடுமைப்படுத்தல்களை “பாடம்” நமக்கு உணர்த்தியது. மூன்று கதாபாத்திரங்களும் நடித்தவர்களின் தேர்ந்த நடிப்பில் உயிர் பெற்று அசையும் படிமங்களாக மனங்களில் பதிந்தன. “பாடம்” என்ற அபத்த நாடகத்தின் அடிப்பொருளை இந்த இளையோர்கள் நமக்கு எடுத்துக் காட்டினார்கள்.
வில்லியம் சேக்ஸ்பியரினால் 1610 இல் எழுதப்பட்ட கடைசி நாடகம் என நம்பப்படும் “The Tempest”, பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதியினல் “சூறாவளி” என்னும் பெயரில் தமிழ்ப்படுத்தப்பட்டது. சேக்ஸ்பியரின் கதாபாத்திரங்கள் முத்துவேல், வெள்ளையம்பலம், முத்துக்கன்னி, மாருதி என்று தமிழ்ப்படுத்தப்படுகிறார்கள். தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் இந்த முயற்சியினால் சேக்ஸ்பியரை அறியாதவர்களும் அவரின் “பெருங்காற்றை” சூறாவளியாக அறிந்து கொள்கிறார்கள். உரிமை மறுப்பு, நிலப்பறிப்பு என்னும் களங்கள் தமிழர் வாழ்வின் சமகாலத்தை எடுத்துச் சொல்கின்றன. நூற்றாண்டுகள் கடந்த சேக்ஸ்பியரின் பிரதியை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் நிகழ்காலத்திற்கு எடுத்து வருகிறது.
தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் இளையவர்களான சந்தோஷ், வீனா, மானசி, செல்வி, சாருசன், சரிதா, கிந்துசா, ஆதிசங்கர், ஜெனுசன், லுக்சியா, சிந்து ஆகியோர் இதில் பங்கேற்றார்கள். முகமூடிகள் அணிந்து நாடகங்களையும், நடனம் போன்ற மேடை நிகழ்வுகளையும் வழங்கும் அரங்க மரபில் சூறாவளி நாடகத்தின் கதாபாத்திரங்கள் முகமூடிகள் அணிந்து ஆற்றுகை செய்தார்கள். கதையும், களியாட்டமும் சேர்ந்த கதக்களி என்ற செவ்வியல் நடனத்தினதும், கூத்து என்று சொல்லப்படும் தமிழர் நாடகத்தினதும் தொடர்ச்சியாக அது அமைந்தது. “முகமூடி அணிந்து “சூறாவளியை” காட்சிப்படுத்துதல் என்னும் நகர்வின் மூலம் நாடகத்திற்கு புதிய பரிமாணங்களை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் அளித்திருக்கிறது” என்று மிகப் பொருத்தமாக பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.
“புதிய பயணம்” நாடகம் யாழ்ப்பாணத்து தமிழில் அமைந்திருந்தது. “பாடம்” ஒரு பொதுத் தமிழிலே இருந்தது. “சூறாவளி” செம்மையான தமிழிலே தரப்பட்டது. இந்த மூன்று நாடகங்களிலும் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரே நடிகர்களே பெரும்பாலும் பங்கேற்றிருந்தனர். நாடகத்திற்கு நாடகம் ஒப்பனையை மாற்றுவது போல இந்த இரண்டாம் தலைமுறை தமிழ் இளையவர்கள் தமது தமிழையும் ஒவ்வொரு நாடகத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி பேசியது ஒரு மிகப் பெரும் சாதனை. தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் அயராத உழைப்பை அது எடுத்துக் காட்டியது. நாடகத்திற்கே தம் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா தம்பதியினருக்கு இந்த இளையவர்கள் செய்த சமர்ப்பணம் என்றே இந்த சாதனையைச் சொல்லலாம்.பின்னைய மூன்று நாடகங்களையும் திரு பாலேந்திரா நெறிப்படுத்தியிருந்தார்.
தமிழ்நாட்டின் மூன்றாந்தர திரைப்படங்களை பார்த்துச் செய்யும் அபத்தங்களே நாடகங்களாக நமது சூழலில் உலவுகின்றன. தலையில் ஒரு மணிமுடியை வைத்து வந்தால் போதும் அது வரலாற்று நாடகமாகி விடும். முகத்தை முறைப்பாக வைத்துக் கொண்டு காட்டுக் கத்தல் கத்தினால் அது குணச்சித்திர நடிப்பாகி விடும். அசட்டுத்தனமாக உளறினால் நகைச்சுவை நாடகமாகி விடும் என்ற புரிதல்கள் இருக்கும் தமிழ்ச்சூழலில் தரமான நாடகங்களை எல்லோருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் நாடகப்பணி அளப்பரியது.
“இளையவர்களே எமது எதிர்காலம்”, “தொடர்ந்த மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்” என்ற தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் செயற்பாடுகள் “மனிதர் மனம் வைத்தால் இந்த மலைகளை அகற்றிடலாம்”, “மனிதர் இணைந்தாலே இந்த மண்ணையும் மாற்றிடலாம்” என்ற “மலைகளை அகற்றிய மூடக்கிழவன்” நாடகத்தின் வரிகளை மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
-மகாலிங்கம் கெளரீஸ்வரன்